ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க அனுமதி தேவையில்லை: இந்தியா

ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க அனுமதி தேவையில்லை: இந்தியா

1 mins read
f1a8e3a0-1443-4585-acca-5051d3fb5a85
வளைகுடா பகுதிகளில் மேலும் 20 இந்தியக் கப்பல்கள் நிற்கும் இவ்வேளையில், 540 இந்தியர்கள் அக்கப்பல்களில் இருப்பதாக ராஜேஷ் சின்ஹா கூறினார். - கோப்புப்படம்: புளூம்பெர்க்

புதுடெல்லி: வளைகுடா பகுதியில் காத்திருக்கும் இருபது இந்தியக் கப்பல்களுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை என இந்திய அரசு தெரிவித்துள்ளது.

இந்தியக் கப்பல்கள் பாதுகாப்பாக இருப்பதாக கப்பல் போக்குவரத்து அமைச்சின் சிறப்புச் செயலாளர் ராஜேஷ் சின்ஹா செவ்வாய்க்கிழமை (மார்ச் 24) செய்தியாளர்களிடம் உறுதி செய்தார்.

கடந்த 24 மணிநேரத்தில் கப்பல்கள் மீதான அச்சுறுத்தல் சம்பவங்கள் ஏதும் நிகழவில்லை என்றும் இந்தியாவுக்கான எல்பிஜியை ஏற்றிக்கொண்டு இரண்டு சரக்குக் கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து தாயகம் நோக்கி வந்து கொண்டிருக்கின்றன என்றும் அவர் குறிப்பிட்டார்.

வளைகுடா பகுதிகளில் மேலும் 20 இந்தியக் கப்பல்கள் நிற்கும் இவ்வேளையில், 540 இந்தியர்கள் அக்கப்பல்களில் இருப்பதாக ராஜேஷ் சின்ஹா கூறினார்.

இனி ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க எந்த அனுமதியும் தேவையில்லை என்றும் அந்நீரிணை அமைந்துள்ள அனைத்துலக கடல்வழித் தடத்தில் தற்போது போக்குவரத்து நடைபெறாததால் அனுமதி தேவையில்லை என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.

ஹோர்முஸ் நீரிணை வழியைப் பயன்படுத்த சுங்கக்கட்டணம் விதிக்கப்படும் என அண்மையில் பரவிய தகவல் அடிப்படை ஆதாரமற்றது என்றும் திரு சின்ஹா திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

இதனிடையே, மத்திய கிழக்கு விவகாரம், அனைத்துலகப் பொருளியலில் அது ஏற்படுத்தியுள்ள தாக்கம் குறித்து அமெரிக்க வெளியுறவு அமைச்சுடன் இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் ஆலோசனை நடத்தியுள்ளார்.

எரிசக்தி பாதுகாப்பு குறித்து இருதரப்பினரும் கவலையை வெளிப்படுத்தியதாக இந்திய வெளியுறவு அமைச்சு தெரிவித்தது.

குறிப்புச் சொற்கள்