தமிழக அமைச்சர்களுடன் செல்ஃபி எடுக்க அனுமதி இல்லை

நிழற்படம் எடுக்க கியூஆர் குறியீட்டை வருடுவது கட்டாயம்

தமிழக அமைச்சர்களுடன் செல்ஃபி எடுக்க அனுமதி இல்லை

2 mins read
fdc90b36-4bda-482a-9632-5715e954ac55
தலைமைச் செயலகத்தில் ஏற்கெனவே சில அறைகளுக்கு வெளியே கியூஆர் குறியீட்டு நிழற்பட முறை நடப்பில் உள்ளது. - படம்: எக்ஸ்பிரஸ்

சென்னை: தலைமைச் செயலகத்தில் அமைச்சர்களின் அறைகளுக்குள் செல்வோர் நிழற்படமோ ‘ரீல்ஸ்’ காணொளியோ எடுக்கக் கைப்பேசியை இனிமேல் பயன்படுத்த முடியாது.

ஆனால், அதற்காக அவர்கள் வருத்தப்பட வேண்டியதில்லை. அமைச்சரின் அறைக்கு வெளியே வைக்கப்பட்டுள்ள கியூஆர் குறியீட்டை வருடுவதன் மூலம், அமைச்சருடன் அன்று எடுக்கப்பட்ட தொழில்முறை நிழற்படத்தை அவர்கள் உடனே பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

அண்மையில் தமிழக முதல்வர் சி ஜோசப் விஜய்யின் அறைக்குச் சென்ற பார்வையாளர் ஒருவர், காணொளியொன்றைப் பதிவுசெய்தார். அதனைத் தொடர்ந்து, செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் அமைச்சர்களின் அறைகளுக்குள் நிழற்படமோ காணொளியோ எடுக்கக் கைப்பேசியைப் பயன்படுத்தக்கூடாது என்ற விதிமுறை நடப்புக்கு வந்துள்ளது. அந்தத் தகவலை மூத்த அமைச்சர் ஒருவர், ‘த நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்’ ஊடகத்திடம் பகிர்ந்துகொண்டார்.

அமைச்சருடன் பார்வையாளர்கள் நிழற்படம் எடுத்துக்கொள்ள விரும்பினால், பிரத்தியேகமாக நியமிக்கப்பட்டுள்ள நிழற்படக் கலைஞர்கள் அதை எடுத்து இணையத்தில் பதிவேற்றம் செய்வார்கள் என்று மூத்த அமைச்சர் சொன்னார்.

“பலர் மிகுந்த மனவேதனையுடனும் மனுக்களைக் கொடுக்கவும் இங்கு வருகின்றனர். தங்களின் புகார், அமைச்சரிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது என்பதைப் பதிவு செய்யவும் சம்பந்தப்பட்ட தரப்பினரிடம் அதனை ஆதாரமாகக் காட்டவும் சிலர் நிழற்படம் எடுக்க விரும்புகிறார்கள். நிழற்படம் எடுப்பது, குறைகள் தீர்க்கப்படும் என்ற நம்பிக்கையை அவர்களிடம் உருவாக்குகிறது,” என்று இன்னோர் அமைச்சர் ‘த நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்’ ஊடகத்திடம் தெரிவித்தார்.

கியூஆர் குறியீட்டு நிழற்பட முறை, தலைமைச் செயலகத்தில் ஏற்கெனவே அமைச்சர்கள் சிலரின் அலுவலகங்களில் பின்பற்றப்படுகிறது. அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா, ஸ்ரீநாத், மேரி வில்சன், ராஜ்மோகன் ஆகியோரின் அறைகளுக்கு வெளியே கியூஆர் குறியீட்டுப் பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன.

குறிப்புச் சொற்கள்