புதுடெல்லி: இந்தியாவில் 18 வயதுக்குட்பட்ட சிறார்களுக்குச் சமூக ஊடகங்களைத் தடை செய்யும் திட்டம் எதுவும் தற்போது இல்லை என்று அந்நாட்டின் அரசு வட்டாரங்கள் தெளிவுபடுத்தி உள்ளன.
முன்னதாக, 18 வயதுக்குட்பட்ட சிறார்கள் சமூக ஊடகக் கணக்குகளைத் தொடங்குவதைத் தடுக்கும் வகையில் தகவல் தொழில்நுட்ப விதிகளில் திருத்தம் மேற்கொள்ளப்படும் என்றும் அதற்கான சட்டபூர்வ பொறுப்பு சமூக ஊடக நிறுவனங்களுக்கே வழங்கப்படும் என்றும் இந்திய உச்ச நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
இருப்பினும், தற்போதைய தகவல்களின்படி, உடனடித் தடை விதிக்கும் திட்டம் ஏதும் பரிசீலனையில் இல்லை என்பது தெரியவந்துள்ளதாக என்டிடிவி ஊடகம் குறிப்பிட்டுள்ளது.
அதேவேளையில், இணையவழிப் பகடிவதை (Cyber bullying), அச்சுறுத்தல், மன அழுத்தம், சமூகப் பதற்றம் போன்ற சிக்கல்களுக்குத் தீர்வு காண்பதில் இந்திய அரசு உறுதியாக உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்காகத் தொழில்துறை வல்லுநர்கள், கல்விமான்கள், உளவியல் நிபுணர்களுடன் அரசு தீவிர ஆலோசனை நடத்தி வருகிறது.
சிறார்களின் சமூக ஊடகப் பயன்பாட்டைக் கட்டுப்படுத்த உலக நாடுகள் பல கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.
சிறார்கள் தினமும் பல மணிநேரங்களைச் சமூக ஊடகங்களில் செலவிடுவதால், அவர்களின் மனநலம், தூக்கம், கல்வி பாதிக்கப்படுவதாக உலக அளவில் கவலைகள் எழுப்பப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், நேரடித் தடையைத் தவிர்த்து சிறுவர்களின் இணையப் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான சரியான தீர்வைக் கண்டறியும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக இந்திய அரசு வட்டாரங்களை மேற்கோள் காட்டி, என்டிடிவி ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
