புதுடெல்லி: வெளிநாடுகளிலிருந்து கொண்டு வரப்படும் தங்கம், வெள்ளி போன்ற விலை உயர்ந்த உலோகங்களுக்கான இறக்குமதி வரியை உயர்த்துவதற்கான திட்டம் எதுவும் இல்லை என்று அரசுத்தரப்பு தகவல்கள் தெரிவித்துள்ளன.
இறக்குமதிப் பொருள்களைச் சார்ந்திருக்கும் போக்கைக் குறைக்கவும் அந்நியச் செலாவணியைச் சேமிக்கவும் பொதுமக்களுக்குக் கடந்த ஞாயிற்றுக்கிழமை (மே 10) பிரதமர் நரேந்திர மோடி யோசனை கூறியிருந்தார். தங்கம் வாங்குவதைத் தள்ளிப்போடமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.
அவரின் அந்த அறிவிப்புக்குப் பின்னர், தங்கம் மற்றும் வெள்ளியின் இறக்குமதித் தீர்வை உயர்த்தப்படலாம் என்ற ஊகச் செய்திகள் பரவின. ஆயினும், தற்போதைய நிலையில் அப்படி எந்தவொரு திட்டமும் இல்லை என்று அரசாங்கத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தங்கம், வெள்ளி இறக்குமதி அதிகரித்து வருவது குறித்த கவலைகள் நிலவினாலும் அவற்றின் இறக்குமதி தொடர்பாக உடனடி நிதி நடவடிக்கைகள் எதனையும் அரசு பரிசீலிக்கவில்லை என்பதை இது உணர்த்துகிறது.
இந்தியா தனது எரிசக்தித் தேவைகளில் 85 விழுக்காட்டுக்கும் அதிகமானவற்றை வேறு நாடுகளிலிருந்து இறக்குமதி செய்கிறது.
மேலும், உலகின் ஆகப்பெரிய தங்க இறக்குமதி நாடுகளில் ஒன்றாகத் தொடர்ந்து திகழும் இந்தியாவின் வர்த்தகப் பற்றாக்குறையில், தங்க இறக்குமதி கணிசமான பங்களிப்பை வகிக்கிறது.
2026 மார்ச்சுடன் முடிவடைந்த நிதி ஆண்டில் பற்றாக்குறை 26 விழுக்காடு அதிகரித்து $119.30 பில்லியன் டாலர் ஆனது. அது கவலையளிக்கும் போக்கு.
பெட்ரோலிய இறக்குமதி சற்றுக் குறைந்தாலும், தங்க இறக்குமதி 24.1% அதிகரித்து $71.98 பில்லியன் டாலரை எட்டியது. வர்த்தகப் பற்றாக்குறை அதிகரித்ததற்கு இதுவே முக்கியக் காரணமாகப் பார்க்கப்படுகிறது.

