புதுடெல்லி: விமானச் சேவைத் துறையில் கால்பதிக்கும் திட்டம் எதுவும் இல்லை என்று அதானி குழுமம் தெரிவித்துள்ளது.
சொந்தமாக விமான நிறுவனத்தைத் தொடங்கி நடத்த அதானி என்டர்பிரைசஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக அண்மையில் ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. வர்த்தகச் சந்தையிலும் இது குறித்துப் பல்வேறு ஊகங்கள் எழுந்தன.
இந்நிலையில், இந்தச் செய்திகள் முற்றிலும் ஆதாரமற்றவை என்றும் உண்மைக்கு மாறானவை என்றும் அந்த நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் வெள்ளிக்கிழமை (ஜூலை 24) தெளிவுபடுத்தினார். விமான நிறுவனத் தொழிலில் ஈடுபடும் எந்தவொரு திட்டத்தையும் தங்களது நிறுவனம் பரிசீலிக்கவில்லை என்றும் அவர் கூறினார்.
தற்போது இந்திய விமானப் போக்குவரத்துச் சந்தையில் இண்டிகோ, டாடா குழுமத்தின் ஏர் இந்தியா இரு நிறுவனங்கள் மட்டுமே பேரளவில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. ஆகாசா ஏர் நிறுவனம் வளர்ந்துவரும் வேளையில், ஸ்பைஸ்ஜெட் போன்ற சிறிய நிறுவனங்கள் பெரும் சவால்களைச் சந்தித்து வருகின்றன.
புதிய நிறுவனங்கள் சந்தைக்குள் நுழைவதை எளிதாக்க இந்திய அரசாங்கம் வழிகளை ஆராய்ந்து வருகிறது. டெல்லி, மும்பை போன்ற நாட்டின் முக்கிய விமான நிலையங்களை நிர்வகிக்கும் நிறுவனங்கள், எந்தவொரு விமான நிறுவனத்திலும் 10 விழுக்காட்டுக்குமேல் பங்குகளை வைத்திருக்கத் தடை உள்ளது. இந்த விதியைத் தளர்த்துவது குறித்தும் அரசு பரிசீலித்து வருகிறது.
அதானி குழுமம், இந்தியாவில் எட்டு முக்கிய விமான நிலையங்களை நிர்வகிக்கும் மிகப்பெரிய தனியார் நிறுவனமாகத் திகழ்கிறது. அதுமட்டுமன்றி, விமானப் பராமரிப்பு, விமானிகள் பயிற்சி, பாகங்கள் தயாரிப்பு போன்ற பல்வேறு விமானச் சேவைத் துறைகளிலும் அது தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
மத்திய கிழக்கு நெருக்கடி, செயல்பாட்டுச் செலவுகள் உயர்வு, இந்திய ரூபாயின் மதிப்புச் சரிவு போன்ற காரணங்களால் விமான நிறுவனங்களுக்குச் சவால்கள் அதிகரித்துள்ளன. இத்தகைய சூழலில், விமானச் சேவைத் தொழிலில் நுழையும் திட்டம் எதுவுமில்லை என்பதை அதானி குழுமம் தெளிவுபடுத்தியுள்ளது.

