டேராடூன்: அழகிப் போட்டிக்கான ஒத்திகையில் ஈடுபட்டிருந்தபோது, திடீரென உள்ளே புகுந்த சிலர், அங்கிருந்த இளம்பெண்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் நாடு முழுவதும் விவாதப் பொருளாக மாறியது.
இந்நிலையில், அக்குறிப்பிட்ட அமைப்பினருடன் 23 வயதான முஸ்கான் சர்மா என்ற போட்டியாளர், தங்களிடம் தகராறு செய்தவர்களுடன் துணிச்சலாக வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன், சரமாரியாக கேள்விகளை எழுப்பி திணறடித்தார்.
இந்தியாவின் ஆன்மிகத் தலங்களில் ஒன்று ரிஷிகேஷ். அண்மையில் அங்கு ‘மிஸ் ரிஷிகேஷ்’ அழகிப்போட்டி நடந்தது. இதில் முஸ்கான் சர்மாவும் பங்கேற்றார்.
போட்டிக்கு முந்திய நாள் அதில் பங்கேற்ற அனைவரும் ஒத்திகையில் ஈடுபட்டிருந்தபோதுதான் சில வெளியாள்கள் திடீரென உள்ளே நுழைந்து குழப்பம் ஏற்படுத்தினர்.
“அரைகுறையாகவும் கவர்ச்சியாகவும் உடைகளை அணிந்து ரிஷிகேஷுக்கு கலங்கம் ஏற்படுத்தக் கூடாது. பாரம்பரியத்தையும் கலாசாரத்தையும் சீரழிக்காமல் உடனே போட்டியை ரத்து செய்யுங்கள்,” என்று எதிர்ப்பு தெரிவித்தபோது, மற்ற பெண்கள் சற்று அச்சம் கொள்ள, முஸ்கான் துணிச்சலாக அவர்களை எதிர்கொண்டார்.
“நாங்கள் அணிவது மோசமான ஆடைகள் என்றால், அவற்றை ரிஷிகேஷில் விற்பனை செய்யும் கடைகளில் இருந்து ஏன் அகற்றச் சொல்லவில்லை?
“இந்த உடைகளைவிட மது, சிகரெட்டால் ஏற்படக்கூடிய தீமைகள்தான் அதிகம். ஏன் அவற்றை விற்கும் கடைகளை இன்னும் மூடவில்லை,” என்று முஸ்கான் கேள்விகளை அடுக்க, எதிர்ப்பாளர்கள் அங்கிருந்து கிளம்பிச் சென்றுவிட்டனர்.
மறுநாள் நடைபெற்ற இறுதிப்போட்டியில் ‘மிஸ் ரிஷிகேஷ்’ பட்டம் வென்று வாகை சூடினார் முஸ்கான்.
சில நாள்களுக்கு முன்பு நடந்த இந்தச் சம்பவம் குறித்து முழுமையான தகவல்கள் இப்போது வெளியான நிலையில், இந்திய இளையர்கள் மத்தியில் அவர் பிரபலமாகி உள்ளார்.
“இது சிறிய உள்ளூர் போட்டிதான். ஆனால் உலக அழகிப் பட்டம் பெற்றதுபோல் உணர வைத்தது. அடுத்து மாநில அளவிலான போட்டியிலும் பங்கேற்பேன். காலம் என்னை எங்கெல்லாம் அழைத்துச் செல்கிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்,” என்று பிபிசி ஊடகப் பேட்டியில் குறிப்பிட்டுள்ளார் முஸ்கான் சர்மா.