பாதுகாப்பு குறைபாடுகள் இல்லை: போயிங் 787 சோதனை முடிவுகளை வெளியிட்ட டிஜிசிஏ

2 mins read
f9e14385-202b-4f2b-9f18-a6c914506900
ஏர் இந்தியா நிறுவனத்திடம் மொத்தமாக 33 போயிங் 787 ரக விமானங்கள் இருக்கும் நிலையில், 24 விமானங்களில் மட்டுமே பாதுகாப்புச் சோதனைகள் முடிக்கப்பட்டுள்ளன. - படம்: ஊடகம்

புதுடெல்லி: ஏர் இந்தியா நிறுவனத்திடம் உள்ள போயிங் 787 ரக விமானங்களில் நடத்தப்பட்ட பாதுகாப்பு குறித்த சோதனை முடிவுகள் வெளியாகி உள்ளன.

அந்த விமானங்களில் பாதுகாப்பு தொடர்பாக எந்தவித குறைபாடுகளும் கண்டறியப்படவில்லை என இந்திய விமானப் போக்குவரத்து இயக்குநரகம் தெரிவித்தது.

அகமதாபாத்தில் ஏர் இந்தியாவின் 787 போயிங் விமானம் விபத்துக்குள்ளானதில் 271 பேர் மாண்டு போயினர். இதையடுத்து அந்நிறுவனத்திடம் உள்ள அனைத்து 787 போயிங் டிரீம்லைனர் விமானங்களையும் பாதுகாப்புச் சோதனைக்கு உட்படுத்துமாறு விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (டிஜிசிஏ) உத்தரவிட்டது.

ஏர் இந்தியா மொத்தம் 33 போயிங் 787 ரக விமானங்களைச் சோதனைக்கு உட்படுத்தியது. 24 விமானங்களில் மட்டுமே பாதுகாப்புச் சோதனைகள் முடிக்கப்பட்டுள்ளன.

அப்போது, எந்தவிதமான பாதுகாப்பு குறைபாடுகளும் கண்டறியப்படவில்லை என விமானப் போக்குவரத்து இயக்குநரகம் தெரிவித்துள்ளது.

இதையடுத்து, அறிக்கை ஒன்றை வெளியிட்ட டிஜிசிஏ, தற்போது உள்ள பாதுகாப்பு தர நிலைகளுக்கு ஏற்ப விமானங்கள் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அதில் குறிப்பிட்டுள்ளது.

விமானப் போக்குவரத்து இயக்குநரகத்துடன் ஏர் இந்தியா அதிகாரிகள் பங்கேற்ற உயர்மட்டக் கூட்டம் செவ்வாய்க்கிழமை (‌ஜூன் 17) நடைபெற்றது. அதன்பின்னர் இந்த அறிக்கை வெளியானது. பொறியியல், செயல்பாடுகள் மற்றும் தரையிறங்குதல் பிரிவுகளில் உள் ஒருங்கிணைப்பை வலுப்படுத்த ஏர் இந்தியாவுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக அந்த அறிக்கை தெரிவித்தது.

விமான விபத்து நிகழ்ந்த கடந்த 12ஆம் தேதி முதல் 17ஆம் தேதி வரையிலான காலத்தில் மட்டும் ஏர் இந்தியா விமானங்களின் பல சேவைகள் ரத்து செய்யப்பட்டன. இதையடுத்து, விமானம் ரத்து செய்யப்படுவது, தாமதமாவது குறித்து பயணிகளிடம் முன்கூட்டியே தெரிவிக்கவும் பயணிகள் சேவையில் கவனம் செலுத்தவும் விமான நிறுவனங்களுக்கு டிஜிசிஏ அறிவுறுத்தி உள்ளதாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறிப்புச் சொற்கள்