தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பள்ளிகளில் கோடை வகுப்புகள் கூடாது; துணைப்பாட நிலையங்களுக்கு நேரக் கட்டுப்பாடு

1 mins read
86286922-e54e-474f-a81f-2b4371ad333b
கேரள மாநிலத்தில் அரசுப் பள்ளிகளும் அரசு உதவிபெறும் பள்ளிகளும் கோடை வகுப்புகளை நடத்த அனுமதியில்லை.  - மாதிரிப்படம்: பிக்சாபே

திருவனந்தபுரம்: கல்வியாண்டு 2024-25க்கான கோடை விடுமுறையின்போது பள்ளிகளில் வகுப்புகளை நடத்துவதற்கான தடையைக் கடுமையாக அமல்படுத்தும்படி இந்தியாவின் கேரள மாநிலக் குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

பள்ளிகள் அத்தடைக்கு இணங்கி நடப்பதை உறுதிசெய்ய வேண்டும் என்றும் அதனை மீறும் பள்ளிகள்மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கல்வித்துறை இயக்குநருக்கு ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

காலை 7.30 மணிமுதல் 10.30 மணிவரை கோடை வகுப்புகளை நடத்திக்கொள்ளலாம் என்று சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ பள்ளிகளுக்குக் கேரள உயர் நீதிமன்றம் சென்ற 2024ஆம் ஆண்டு அனுமதி அளித்திருந்தது. அத்தீர்ப்பை அவ்வகைப் பள்ளிகள் பின்பற்ற வேண்டும் என்றும் குழந்தை உரிமைகள் ஆணையம் வலியுறுத்தி இருக்கிறது. அந்தந்த வட்டார அலுவலர்களும் தலைவர்களும் அத்தீர்ப்பு நடைமுறைப்படுத்தப்படுவதைக் கண்காணிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இதற்கிடையே, அரசுப் பள்ளிகளும் அரசு உதவிபெறும் பள்ளிகளும் கோடை வகுப்புகளை நடத்த அனுமதியில்லை. அத்தகைய வகுப்புகளை நடத்த கேரளக் கல்வித்துறை விதிகளில் இடமில்லை. ஆயினும், அத்தகைய பள்ளிகளில் கோடை வகுப்புகளை நடத்துவதற்கு அனுமதி அளிக்கும் வகையில் சிறப்பு உத்தரவுகளைப் பிறப்பிக்க அரசுக்கு அதிகாரம் உண்டு.

ஆணைய வழிகாட்டுதலின்படி, தனியார் துணைப்பாட நிலையங்கள் (டியூஷன் சென்டர்) காலை 7.30 மணிக்குத் தொடங்கி 10.30 மணிக்குள் வகுப்புகளை முடித்துவிட வேண்டும். விதிமீறுவோர்மீது கடுமையான நடவடிக்கை எடுக்கும்படி மாநிலக் காவல்துறைத் தலைவர் அறிவுறுத்தப்பட்டுள்ளார்.

இவ்விதியை நடைமுறைப்படுத்திய 15 நாள்களுக்குள் அதுபற்றி ஆணையத்திற்கு அறிக்கை அளிக்குமாறும் உரிய அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்