வரி செலுத்துவோரின் எண்ணிக்கை 10 கோடியைத் தாண்டியது

1 mins read
7d389cd8-7cc9-4b02-b56b-c419cec85f3b
2014-15 நிதி ஆண்டில் வரி செலுத்துவோரின் எண்ணிக்கை 5.7 கோடியாக இருந்தது. - கோப்புப் படம்: ஊடகம்

புதுடெல்லி: பிரதமராக நரேந்திர மோடி பதவி ஏற்ற ஒன்பது ஆண்டுகளில் நாட்டில் வரி செலுத்துவோரின் எண்ணிக்கை 10 கோடியைத் தாண்டி உள்ளது.

மோடி முதல்முறை பதவி ஏற்ற 2014-15 நிதி ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த எண்ணிக்கை 82 விழுக்காடு அதிகம்.

அதேபோல, 2023-24ஆம் ஆண்டுக்கான வரிவசூல் 182 விழுக்காடு அதிகரித்து உள்ளது. இந்த நிதி ஆண்டில் மட்டும் ரூ.19.60 லட்சம் கோடி நேரடி வரி வசூலாகியுள்ளது.

மத்திய அரசின் நேரடி வரிகளுக்கான வாரியம் இந்த விவரங்களை வியாழக்கிழமை (அக்டோபர் 17) வெளியிட்டது.

2023-24 நிதி ஆண்டில் 10.4 கோடி இந்தியர்கள் வரி செலுத்துவோருக்கான பட்டியலில் இடம்பெற்றதாக அது தெரிவித்தது. 2014-15 நிதி ஆண்டில் அந்த எண்ணிக்கை 5.7 கோடியாக இருந்தது.

மேலும், 2023-24 நிதியாண்டில் ரூ.9.11 லட்சம் கோடி நிறுவன வரி வசூலிக்கப்பட்டுள்ளது.

இது கடந்த ஒன்பது ஆண்டுகளில் இரட்டிப்பாகியுள்ளது. இதே காலகட்டத்தில் தனிநபா் வருமான வரி வசூல் நான்கு மடங்கு உயா்ந்து ரூ.10.45 லட்சம் கோடியாக உள்ளது.

பிரதமா் மோடியின் முதல் பதவிக் காலத்தில், 2014-15-ஆம் நிதியாண்டில் நேரடி வரி வசூல் ரூ.6.96 லட்சம் கோடியாக இருந்தது. இதில் நிறுவன வரியின் பங்களிப்பு ரூ.4.29 லட்சம் கோடியாகவும் தனிநபா் வருமான வரியின் பங்களிப்பு ரூ.2.66 லட்சம் கோடியாகவும் இருந்தது.

குறிப்புச் சொற்கள்