புதுடெல்லி: ஈரான் மீதான போர்ச் சூழலுக்கிடையே மத்திய கிழக்கிலிருந்து இந்தியர்கள் நாடு திரும்பத் தொடங்கியுள்ளனர்.
துபாயிலிருந்து டெல்லிக்கு செவ்வாய்க்கிழமை (மார்ச் 3) முதல் ஏர் இந்தியா விமானம் வந்து இறங்கியது. இதில் 149 பயணிகள் வந்தனர்.
“வானத்தில் ஏவுகணைகள் இடைமறித்து அழிக்கப்படுவதை நேரடியாகவே பார்க்க முடிந்தது,” என்றார் விமானத்தில் தாயகம் திரும்பிய இந்தியர் பியூஷ் பல்லவ், 32.
ஜெட்டாவிலிருந்து ஏறக்குறைய 200 பேர் செவ்வாய்க்கிழமை இரவு இண்டிகோ விமானத்தில் குஜராத்தின் அகமதாபாத் அனைத்துலக நிலையத்தில் தரையிறங்கினர்.
மீட்பு நடவடிக்கையை மேற்கொண்ட இந்திய அரசுக்குத் திரும்பி வந்தவர்கள் நன்றி தெரிவித்தனர்.
துபாய், ஐக்கிய அரபுச் சிற்றரசுகள் சூழ்நிலையைக் கையாளும் விதத்தை நாடு திரும்பும் பெரும்பாலானோர் பாராட்டுகின்றனர். துபாயிலிருந்து இந்தூர் திரும்பிய தொழிலதிபர் பிரவீன் கக்கர், “அங்கு நிலைமை பதற்றமாக இருந்தாலும், ஒட்டுமொத்த நிலைமை சீராக உள்ளது. அங்குள்ள அரசாங்கம் சிறப்பாகச் செயல்படுகிறது,” என்று தெரிவித்தார்.
மாற்றுவழிகள் மூலம் நீண்ட தூர விமானச் சேவைகள் படிப்படியாக மீண்டும் தொடங்கப்பட்டுள்ளன.
மார்ச் 4 ஆம் தேதி திட்டமிடப்பட்ட 58 விமானங்களில், இண்டிகோ 30 விமானங்களையும், ஏர் இந்தியா, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் 23 விமானங்களையும் இயக்கவுள்ளன.
தொடர்புடைய செய்திகள்
பயணிகளின் போக்குவரத்தை எளிதாக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்படுவதாக விமானப் போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது. இதில் கூடுதல் விமானங்களை இயக்குவது, விமானக் கட்டணங்களில் அதிக உயர்வு இல்லாமல் உறுதிப்படுத்துவது, பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்ய வெளிநாட்டு அதிகாரிகள், வெளிநாடுகளிலுள்ள இந்தியத் தூதரகங்களுடன் நெருக்கமாக ஒருங்கிணைப்பதும் அடங்கும்.
டெஹ்ரான் மாணவர்களுக்கு பாதுகாப்பு
இதற்கிடையே, டெஹ்ரான் நகரிலுள்ள இந்திய மாணவர்களைப் பாதுகாப்பான இடங்களுக்கு அங்குள்ள இந்தியத் தூதரகம் மாற்றியுள்ளது.
டெஹ்ரானுக்கு வெளியே அமைந்துள்ள இடங்களில் அவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்குத் தேவையான போக்குவரத்து, உணவு, தங்குமிட வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இந்த இடமாற்றத்தை விரும்பாத சில மாணவர்கள் மட்டும் டெஹ்ரானிலேயே தங்கியுள்ளனர் என்று தூதகரம் தெரிவித்தது.
சிறப்புக் கட்டுப்பாட்டு அறை, அவசர உதவி எண்கள்
மேலும், வளைகுடா நாடுகளில் வசிக்கும் இந்தியர்களுக்கான சிறப்புக் கட்டுப்பாட்டு அறையை இந்திய அரசு திறந்துள்ளது.
காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை சிறப்பு கட்டுப்பாட்டு அறை செயல்படும்.
1800118797 என்ற இலவச எண்ணைத் தொடர்புகொண்டு இந்தியர்கள் உதவி கோரலாம். +91 11 2301 2113, +91 11 2301 4104, +91 11 2301 7905 ஆகிய எண்களிலும் இந்தியர்கள் தொடர்பு கொள்ளலாம். ஒவ்வொரு நாட்டுக்கும் தனித்தனியே அவசர உதவி எண்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.
ஓமன் சுல்தான், குவைத் இளவரசர் ஆகியோருடன் தொலைபேசி வாயிலாக ஆலோசனை நடத்திய பிரதமர் நரேந்திர மோடி, அங்கு வசிக்கும் இந்தியர்களின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு கேட்டுக்கொண்டுள்ளார். திங்கள்கிழமையன்று சவூதி அரேபியா, பஹ்ரேன், ஜோர்தான் நாட்டுத் தலைவர்களுடன் அவர் பேச்சு நடத்தினார்.

