புதுடெல்லி: இந்தியா முன்னேற்றப் பாதையில் செல்கிறது என்றும் அதன் வேகத்தை நிறுத்தும் மனநிலையில் மக்கள் இல்லை என்றும் பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
டெல்லியில் ஒரு தனியார் ஊடக நிறுவனம் ஏற்பாடு செய்திருந்த உச்சநிலை மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய அவர், 140 கோடி இந்தியர்களும் முழு வேகத்துடன் ஒன்றாக முன்னேறுவர் என்றார்.
தற்போது உலகம் பல்வேறு தடைகளை எதிர்கொள்வதால் இந்தியாவின் இந்த வேகமான பொருளியல் குறித்து மற்ற நாடுகள் பேசுவது இயல்பானது என்றும் பலவீனமான ஐந்து பொருளியல்களில் ஒன்றாக இருந்த இந்தியா, தற்போது முதல் ஐந்து பொருளியல் நிலையில் முக்கியமான நாடாக வளர்ந்துள்ளது என்றும் திரு மோடி தெரிவித்தார்.
“இந்தியா மிகுந்த தன்னம்பிக்கை கொண்ட நாடு. கணினிச் சில்லு முதல் கப்பல்வரை ஒவ்வொரு துறையிலும் நம்பிக்கையுடன் முன்னேறி வருகிறது. இன்று உலகம் முழுவதும் இந்தியாவை நம்பகமான, பொறுப்பான, நெகிழ்ச்சியான பங்காளியாக பார்க்கிறது,” என்றார் அவர்.
“நக்சல்கள் இந்தியாவின் வளர்ச்சிக்குத் தடையாக இருந்தனர். அவர்களின் ஆதிக்கம் இல்லாத இந்தியாவை உருவாக்குவோம்,” என்றும் அவர் சொன்னார்.
பல சவால்களில் இருந்து நாடு மீண்டுள்ளதாகக் கூறிய பிரதமர், அனைத்து இந்திய குடிமக்களும் முன்னேறிச் செல்கின்றனர் என்றார்.
பிரச்சினைகளிலிருந்து இந்தியா மீள முடியாது என்று மக்கள் நம்பத் தொடங்கியதாகவும் எனினும் கடந்த 11 ஆண்டுகளில் இந்தியா பல தடைகளைத் தகர்த்தெறிந்துள்ளதாகவும் திரு மோடி குறிப்பிட்டார்.

