உள்ளாட்சித் தேர்தல் வேட்புமனு தாக்கல்: ஆந்திராவில் வெடித்தது வன்முறை

உள்ளாட்சித் தேர்தல் வேட்புமனு தாக்கல்: ஆந்திராவில் வெடித்தது வன்முறை

படம்: தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்

18 Oct 2026 - 6:48 pm

1 mins read

அமராவதி: ஆந்திராவில் நடைபெற உள்ள உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் தொடங்கிய நிலையில், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் தெலுங்கு தேசம், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியினர் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இதனால் பல இடங்களில் பதற்றமான சூழல் நிலவுகிறது.

புங்கனூர், ராய்ச்சோட்டி, திருப்பதி, தர்மாவரம் ஆகிய பகுதிகளில் வேட்புமனுத் தாக்கல் செய்ய வந்த இரு கட்சித் தொண்டர்களும் ஒருவர் மீது ஒருவர் கற்களை வீசியும் தடிகளால் தாக்கியும் வன்முறையில் ஈடுபட்டனர்.

புங்கனூர் நகராட்சிப் பகுதியில் சாலையில் நிறுத்தப்பட்டிருந்த பல கார்களுக்குத் தீ வைக்கப்பட்டதுடன், பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினரின் வாகனங்களும் அடித்து நொறுக்கப்பட்டன.

நிலைமையைக் கட்டுப்படுத்தவும் வன்முறை கும்பலைக் கலைக்கவும் காவல்துறையினர் வான்நோக்கித் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இந்த மோதல்களில் இரு தரப்பையும் சேர்ந்த ஏராளமான தொண்டர்கள் பலத்த காயமடைந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வன்முறைச் சம்பவங்களைத் தொடர்ந்து, பதற்றமான பகுதிகளில் கூடுதல் காவல்துறையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அசம்பாவிதங்களைத் தவிர்க்க 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, தீவிர கண்காணிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

திருப்பதியிலும் மோதல்

இதேபோல், திருப்பதி மாநகராட்சி அலுவலகத்துக்கு மனுத் தாக்கல் செய்ய வந்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் வேட்பாளர் வாசு யாதவின் மனுக்களை மர்ம நபர்கள் பறித்துச் சென்றதாகவும் செய்தியாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடப்பா மாவட்டம் முழுவதும் கூடுதல் காவல்துறையினர் குவிக்கப்பட்டு தீவிர பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்