தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பிணையில் வெளியே வரமுடியாதபடி பாபா ராம்தேவுக்கு எதிராகக் கைதாணை

1 mins read
76534120-983e-4ced-9647-d27303e2960d
யோகா குரு பாபா ராம்தேவும் (இடது) பதஞ்சலி ஆயுர்வேத நிறுவனத்தின் தலைவர் ஆச்சார்யா பாலகிருஷ்ணாவும். - கோப்புப்படம்

திருவனந்தபுரம்: யோகா குரு பாபா ராம்தேவையும் அவருடைய பதஞ்சலி ஆயுர்வேத நிறுவனத்தின் தலைவர் ஆச்சார்யா பாலகிருஷ்ணாவையும் கைதுசெய்ய கேரள நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குற்றவியல் வழக்கில் அவ்விருவரும் நீதிமன்றத்தில் முன்னிலையாகாததை அடுத்து, அவர்களுக்கு எதிராகப் பிணையில் வெளிவர முடியாதபடி பாலக்காடு நீதிமன்றம் கைதாணை பிறப்பித்துள்ளது.

ஆங்கில, மலையாள நாளிதழ்களில் தவறாக வழிநடத்தும் மருத்துவ விளம்பரங்களை வெளியிட்டதாகக் கூறி திவ்யா மருந்தகத்திற்கு எதிராக கேரள மருந்து இயக்குநர் வழக்கு தொடுத்திருந்தார்.

புதிய பிடியாணையின்படி, பிப்ரவரி 15ஆம் தேதிக்குள் ராம்தேவும் பாலகிருஷ்ணாவும் முன்னிலையாக வேண்டும். முன்னதாக, பிப்ரவரி 1ஆம் தேதிக்குள் அவர்கள் முன்னிலையாகும்படி பாலக்காடு மாவட்ட நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது.

பதஞ்சலி நிறுவனத் தயாரிப்புகள் நீரிழிவு, உயர் ரத்த அழுத்தப் பிரச்சினைகளைத் தீர்ப்பதாகக் கூறி அந்நிறுவனம் விளம்பரங்கள் வெளியிட்டிருந்ததாகக் கூறப்பட்டது.

இதனையடுத்து, பதஞ்சலி நிறுவனத்திற்கு எதிராக கேரளத்தில் மட்டும் கோழிக்கோடு, பாலக்காடு, எர்ணாகுளம், திருவனந்தபுரம் நீதிமன்றத்தில் மொத்தம் பத்து வழக்குகள் தொடுக்கப்பட்டுள்ளன. உத்தராகண்டின் ஹரித்துவார் நீதிமன்றத்திலும் அந்நிறுவனத்திற்கு எதிராக வழக்கு விசாரணை நடந்து வருகிறது.

குறிப்புச் சொற்கள்