தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

வாக்களிப்பதில் ஆர்வம் காட்டாத வெளிநாடுவாழ் இந்தியர்கள்

2 mins read
59a1a27a-4344-40e9-bc3e-1e39bfb39da2
வெளிநாடுவாழ் இந்திய வாக்காளர்களாகப் பதிவுசெய்துகொண்டோரில் அதிகமானோர் கேரள மாநிலத்தவர். - மாதிரிப்படம்: ஊடகம்

புதுடெல்லி: வாக்காளர் பட்டியலில் தங்களது பெயரைச் சேர்ப்பதில் பேரார்வம் காட்டிய வெளிநாடுவாழ் இந்தியர்கள், அந்த ஆர்வத்தை ‘வாக்களிக்க வேண்டும்’ என்பதில் காட்டவில்லை.

வெளிநாடுவாழ் இந்திய வாக்காளர்களாக 119,374 பேர் பதிவுசெய்திருந்தும் அவர்களில் 2,958 பேர் மட்டுமே இந்தியா சென்று 2024ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களித்தனர் என்று இந்தியத் தேர்தல் ஆணையம் வெளியிட்ட தரவுகள் தெரிவிக்கின்றன.

அந்த 119,374 வாக்காளர்களில் 89,839 பேர் கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். அதேபோல, வாக்களித்த 2,958 பேரிலும் 2,670 பேர் அம்மாநிலத்தவர்.

கர்நாடகா, உத்தரப் பிரதேசம், தமிழ்நாடு போன்ற பெரிய மாநிலங்களிலிருந்து வெளிநாடுவாழ் இந்திய வாக்காளர்களாகப் பதிவுசெய்தோரில் ஒருவர்கூட வாக்களிக்கவில்லை என்பது வேதனைக்குரிய தகவல்.

பீகார், அசாம், கோவா ஆகிய மாநிலங்களும் அப்பட்டியலில் இடம்பெற்றுள்ளன.

பிரதமர் நரேந்திர மோடியின் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த 885 பேர் அத்தகைய வாக்காளர்களாக இருந்தும் இருவர் மட்டுமே வாக்களித்தனர்.

அதேபோல, மகாராஷ்டிராவைச் சேர்ந்த 5,097 வெளிநாடுவாழ் இந்திய வாக்காளர்களில் 17 பேர் மட்டுமே தங்கள் வாக்குரிமையை நிறைவேற்றினர்.

ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த 7,927 பேர் வெளிநாடுவாழ் இந்திய வாக்காளர்களாகப் பதிவுசெய்துகொண்ட நிலையில், அவர்களில் 195 பேர் மட்டுமே இந்தியா சென்று, தங்கள் ஜனநாயகக் கடமையை ஆற்றினர்.

பல்வேறு காரணங்களுக்காக வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்களில் மக்களவை, சட்டமன்றம், இதர தேர்தல்களில் வாக்களிக்கத் தகுதிபெற்றுள்ளவர்கள் வெளிநாடுவாழ் இந்திய வாக்காளர்களாகக் கருதப்படுகின்றனர்.

பயணச் செலவு, வேலைச் சூழல், கல்வி உள்ளிட்ட காரணங்களால் வாக்களிப்பதற்காகத் தங்களால் இந்தியா வர இயலவில்லை என்று வெளிநாடுவாழ் இந்திய வாக்காளர்கள் தெரிவித்துள்ளதாகத் தேர்தல் ஆணையம் குறிப்பிட்டது.

கடந்த 2018 ஆகஸ்ட் மாதம், வாக்களிக்கும் தகுதி உடைய வெளிநாடுவாழ் இந்தியர்கள் தங்கள் சார்பில் இன்னொருவர் தேர்தலில் வாக்களிக்க அனுமதிக்கும் மசோதா 16ஆவது மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. ஆயினும், அம்மசோதா நாடாளுமன்ற மேலவையில் முன்மொழியப்படவே இல்லை.

குறிப்புச் சொற்கள்