தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

அசைவ உணவு: குஜராத்தியர் - மராட்டியர் இடையே மோதல்

2 mins read
25dd8a66-a748-491c-acec-b3835e79c65e
மராட்டிய மொழி பேசும் குடும்பங்களுக்கு ஆதரவாக மகாராஷ்டிர நவநிர்மாண் சேனா அமைப்பினர் களமிறங்கினர். - படம்: இன்ஸ்டகிராம்/ராஜ் பார்த்தே

மும்பை: அசைவ உணவு உட்கொண்டது தொடர்பில் மராட்டியர்களுக்கும் குஜராத்தியர்களுக்கும் இடையே வாக்குவாதம் மூண்டது.

மகாராஷ்டிர மாநிலத் தலைநகர் மும்பையின் காட்கோப்பரில் அமைந்துள்ள அந்தக் குடியிருப்புப் பகுதியில் நிகழ்ந்த இம்மோதலையடுத்து வியாழக்கிழமை (ஏப்ரல் 17) காவல்துறை தலையிட்டது.

அசைவ உணவு உண்டதற்காக மராட்டிய மொழி பேசும் அண்டைவீட்டாரை இழிவுபடுத்தியதாகக் கூறப்பட்ட நிலையில், மகாராஷ்டிர நவநிர்மாண் சேனா (எம்என்எஸ்) அமைப்பினரும் இதில் தலையிட்டனர்.

பின்னர், மொழியின் அடிப்படையில் இப்படி அவமதிக்கும் செயல்களை ஏற்றுக்கொள்ள முடியாது என்று மகாராஷ்டிர அமைச்சர் ஆஷிஷ் ஷேலார் தெரிவித்தார்.

சம்பவம் தொடர்பான காணொளி இணையத்தில் பரவியது.

அதில், அந்தக் குடியிருப்பு வளாகத்தில் வசிக்கும் மராட்டிய மொழி பேசும் குடும்பங்களை அவமரியாதையாக நடத்துவதாகக் கூறி, அங்குள்ள குஜராத்திக் குடும்பங்களுக்கு எம்என்எஸ் அமைப்பினர் எச்சரிக்கை விடுப்பது அக்காணொளியில் தெரிந்தது.

“மும்பையில் யார் வேண்டுமானாலும் வசிக்கலாம், வேலைசெய்யலாம். ஆனால், இத்தகைய சம்பவங்களைப் பொறுத்துக்கொள்ள முடியாது. மராட்டியர்கள் என்ன சாப்பிட வேண்டும் என்பதை மற்றவர்கள் சொல்லக்கூடாது,” என்று ராஜ் பார்த்தே என்ற எம்என்எஸ் உறுப்பினர் கூறுவதும் காணொளிமூலம் தெரியவந்தது.

அண்டைப் பகுதியில் வசிக்கும் மராட்டியக் குடும்பங்கள் தங்கள் வீட்டில் அசைவம் சமைக்கக்கூடாது என்று தடை விதித்துள்ளதாகத் தமக்குத் தகவல் வந்துள்ளதாகவும் அவர் சாடினார்.

இதனையடுத்து, அப்பகுதியைச் சேர்ந்த குடியிருப்பாளர் ஒருவர் காவல்துறைக்குத் தகவல் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து, அங்கு சென்ற காவல்துறை, மராட்டிய மொழி பேசுவோரை அவமதிக்கக்கூடாது என்றும் மீறினால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்ததாக பிடிஐ செய்தி வெளியிட்டுள்ளது.

இதன் தொடர்பில் புகார் எதுவும் பதிவுசெய்யப்படவில்லை என்று காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

View post on Instagram
 
குறிப்புச் சொற்கள்