தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

‘வடகிழக்கு இந்தியா பங்ளாதே‌ஷுடையது’: பாகிஸ்தான் ஜெனரலுக்கு யூனுசின் அன்பளிப்பால் சர்ச்சை

1 mins read
0c7b3af6-55ad-44b8-85cb-5ea302a1f7b0
பங்ளாதே‌ஷின் இடைக்காலத் தலைவர் முகம்மது யூனுஸ். - கோப்புப் படம்: ஏஎஃப்பி

டாக்கா: பங்ளாதே‌ஷின் இடைக்காலத் தலைவரான முகம்மது யூனுஸ், பாகிஸ்தானிய ராணுவ ஜெனரலுக்கு அளித்த அனிபளிப்பால் சர்ச்சை எழுந்துள்ளது.

திரு யூனுஸ், பாகிஸ்தானின் தலைமைத் தளபதியான ஜெனரல் ‌சாஸிர் ஷம்‌ஷத் மிர்ஸாவுக்குத் தந்த அன்பளிப்பில் பங்ளாதே‌ஷைச் சித்திரிக்கும் வரைபடம் ஒன்று இடம்பெற்றிருந்தது. அதில் அசாம் உள்ளிட்ட இந்தியாவின் பல்வேறு வடகிழக்கு மாநிலங்கள் பங்ளாதே‌ஷில் இருப்பதாகச் சித்திரிக்கப்பட்டுள்ளது.

ஜெனரல் சாஹிர் பங்ளாதே‌ஷ் தலைநகர் டாக்காவுக்கு அதிகாரத்துவப் பயணம் மேற்கொண்டபோது அவருக்கு இந்த அன்பளிப்பு வழங்கப்பட்டதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்தன.

சம்பந்தப்பட்ட வரைபடம் இடம்பெற்றுள்ள படம் திரு யூனுசின் எக்ஸ் கணக்கில் பகிரப்பட்டது. அப்படத்தில் ‘வெற்றிக் காவியம்: பங்ளாதே‌ஷின் புதிய உதயம்’ (Art of Triumph: Bangladesh’s new dawn) என்ற தலைப்பில் புத்தகம் காணப்பட்டது. அப்புத்தகம், சென்ற ஆண்டு, முன்னைய பிரதமர் ‌ஷேக் ஹசினாவின் ஆட்சியைக் கவிழ்த்த மாணவர் போராட்டத்துக்கு மரியாதை செலுத்தும் ஒன்றாகப் பார்க்கப்படுகிறது.

திரு யூனுசின் பதிவில் காணப்படும் பங்ளாதே‌ஷ் வரைபடம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதில் ‘விரிவுபடுத்தப்பட்ட பங்ளாதே‌ஷ்’ (Greater Bangladesh) எனும் திட்டம் சித்திரிக்கப்படுவதாகக் கூறப்படுகிறது.

திரு யூனுஸ், ஏற்கெனவே ஒருமுறை இந்தியாவின் வடகிழக்குப் பகுதியை ‘சொந்தம் கொண்டாடியிருக்கிறார்’. கடந்த ஏப்ரல் மாதம் சீனாவுக்குப் பயணம் மேற்கொண்டபோது அவர் அவ்வாறு செய்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்