புதுடெல்லி: இந்தியாவில் தாக்கல் செய்யப்பட்டு உள்ள வரவுசெலவுத் திட்டம் மாநிலத் தேர்தல்களை மனத்தில் வைத்து தயாரிக்கப்படவில்லை என்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்து உள்ளார்.
பீகார், டெல்லி சட்டமன்றத் தேர்தல்களை முன்னிட்டு வாக்காளர்களைக் கவரும் விதமாக அந்த மாநிலங்களுக்கு சலுகைகள் வாரி வழங்கப்பட்டு உள்ளதாக எதிர்க்கட்சிகள் வெளியிட்ட கருத்துகளை அவர் மறுத்துள்ளார்.
வரவுசெலவுத் திட்டத்தை சனிக்கிழமை (பிப்ரவரி 1) மக்களவையில் தாக்கல் செய்த திருவாட்டி நிர்மலா, மறுநாளான ஞாயிற்றுக்கிழமை என்டிடிவி ஊடகத்துக்கு சிறப்பு பேட்டி அளித்தார்.
அப்போது கேட்கப்பட்ட கேள்விகளுக்கு நிர்மலா சீதாராமன் பதில் அளிக்கையில், “இது தேர்தலுக்கான பட்ஜெட் அல்ல. மக்களால், மக்களுக்காக தயாரிக்கப்பட்ட மக்களின் பட்ஜெட் இது,” என்றார்.
“மோடி அரசாங்கம் எப்போதும் நேர்மையாக வரிசெலுத்துவோருக்கு உரிய மரியாதை அளித்து வருகிறது. நாட்டின் ஒட்டுமொத்த நடுத்தர வர்க்கத்தினருக்கு ஆதரவு வழங்கும் வகையில் பட்ஜெட்டில் சலுகைகள் இடம்பெற்று உள்ளன.
“வளர்ச்சி பெற்ற இந்தியா (விக்சித் பாரத்) என்னும் இலக்கின் அடித்தளத்தை வலுப்படுத்தும் அதேநேரம் சுகாதாரம், சத்துணவு, கல்வி ஆகியவற்றுக்கான நல்வாழ்வுத் திட்டங்கள் மீதும் அரசாங்கம் கவனம் செலுத்துகிறது.
“மேலும், கடந்த சில ஆண்டுகளாக மோடி அரசாங்கம் மேற்கொண்ட மூலதனச் செலவுகள் (capex) மீதும் உரிய கவனம் செலுத்தப்படுகிறது. அதன் விளைவாக நுகர்வை பெரிதளவில் அதிகரிப்பதற்கான திட்டங்கள் தற்போது அறிவிக்கப்பட்டு உள்ளன.
“கொவிட்-19 பெருந்தொற்று காலம் முதல் மூலதனச் செலவுகளை அரசாங்கம் 10-15 விழுக்காடு அதிகரித்து வருகிறது. அதன்படி, கடந்த ஆண்டுக்கான செலவு 11.11 லட்சம் கோடி ரூபாய் என அரசாங்கம் அறிவித்தது.
தொடர்புடைய செய்திகள்
“மேலும், வருவாய் செலவுகளோடு ஒப்பிடுகையில் அது 10.23 விழுக்காடு அதிகம். வருவாய் குறைவாகவும் மக்கள்நலத் திட்டங்களுக்கான செலவு அதிகமாகவும் ஓர் அரசாங்கம் செய்வது அவ்வளவு எளிதான செயலல்ல.
“சுங்கவரி பங்கீட்டு முறையை அரசாங்கம் அறிவித்து உள்ளது. இந்தியப் பொருளியல் தற்சார்பு நிலையை உறுதிசெய்ய அது உதவும்.
“நாம் நமது பொருளியல் வளர்ச்சி மீது அதிகக் கவனம் செலுத்துகிறோம். உற்பத்தி மையமாக இந்தியாவை உருவாக்க இந்தியப் பொருளியலின் அடிப்படையைப் பலப்படுத்துவது அவசியம். அதற்கு முக்கியத்துவம் தருகிறோம்.
“மக்கள் செயற்கை நுண்ணறிவுத் திறன் பெறவேண்டும் என்ற நோக்கில் அதற்கான பயிற்சி மையங்களை ஏற்படுத்த இருக்கிறோம்,” என்று திருவாட்டி நிர்மலா, வரவுசெலவுத் திட்ட சாதனைகளை அடுக்கினார்.

