புதுடெல்லி: நக்சலைட் அமைப்புகளின் சண்டை நிறுத்த அறிவிப்பை ஏற்க இயலாது என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
நக்சல்கள் தங்களது ஆயுதங்களைக் கீழே போடுவது மட்டுமே ஒரே தீர்வாக அமையும் என அவர் கூறியுள்ளார்.
நாட்டின் பல்வேறு மாநிலங்களில் நக்சலைட்டுகளின் ஆதிக்கம் அதிகரித்து வந்ததை அடுத்து, அவர்களுக்கு எதிராக மத்திய அரசு தீவிர நடவடிக்கைகளை மேற்கொள்ள முடிவு செய்தது.
அதன் எதிரொலியாகத் தற்போது அக்குறிப்பிட்ட மாநிலங்களில் ஒரே சமயத்தில் மத்திய அரசின் அதிரடிப் படையினர் தாக்குதல் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.
இதையடுத்து, ஏராளமான நக்சலைட்டுகள் கொல்லப்பட்டுள்ளனர், பலர் சரணடைந்துள்ளனர்.
இந்நிலையில், சண்டை நிறுத்த அறிவிப்பை நக்சலைட் அமைப்புகள் வெளியிட்டன. ஆனால், அனைவரும் சரணடையும் வரை அல்லது கொல்லப்படும் வரை மத்திய அரசின் நடவடிக்கைகள் ஓயாது என்று அமைச்சர் அமித்ஷா உறுதிபடக் கூறியுள்ளார்.
“இதுவரை நடந்தது குறித்து தவறான தகவல் வெளியாகி உள்ளது. தாங்கள் சண்டை நிறுத்தத்தை அறிவிப்பதாகவும் சரணடைய விரும்புவதாகவும் நக்சல்கள் தரப்பில் ஒரு கடிதம் எழுதப்பட்டது.
இதன்மூலம் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சி செய்கின்றனர். தற்போதைய சூழலில் சண்டை நிறுத்தத்துக்கு வாய்ப்பு இல்லை என்று அறிவிக்கிறேன்.
“நக்சல்கள் சரண் அடைய விரும்பும் பட்சத்தில், சண்டை நிறுத்தம் என்பது தேவையில்லை. உங்கள் ஆயுதங்களைக் கீழே போடுங்கள்.
“ஒரு தோட்டாகூட உங்களை நோக்கிப் பாயாது. மாறாக, சரணடைய விரும்பினால் சிவப்புக் கம்பள வரவேற்பு காத்திருக்கிறது,” என்று அமித்ஷா மேலும் கூறியுள்ளார்.