தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

‘தேநீரில் ருசியில்லை’: இந்தியாவுக்கான சிங்கப்பூர் தூதரின் கருத்துக்குப் பதில்

2 mins read
பலரின் அன்பான அழைப்பால் நெகிழ்ச்சி
63cf355a-7bc0-4cd7-8102-12466a08d21f
இந்தியாவுக்கான சிங்கப்பூர் தூதர் சைமன் வோங்கின் பதிவில் இடம்பெற்ற படம். - படம்: SG in India/X

குருகிராம்: இந்தியாவுக்கான சிங்கப்பூர் தூதர் சைமன் வோங், இந்தியாவின் ஹரியானா மாநிலம், குருகிராமில் அண்மையில் தேநீர் பருகிய அனுபவத்தைப் பகிர்ந்தார்.

இதுகுறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்ட அவர், குருகிராமில் உள்ள கடை ஒன்றில் தாம் அருந்திய தேநீரின் சுவை ஏமாற்றம் தந்ததாகக் கூறினார். அந்தக் கடையின் பெயரைக் குறிப்பிடாவிட்டாலும், அவர் பகிர்ந்த படத்தில் அது ‘சாயோஸ்’ என்ற கடை என்பதைப் பார்க்க முடிந்தது.

திரு வோங்கின் இந்தப் பதிவு, சாயோஸ் நிறுவனர் நிதின் சலுஜாவின் கவனத்தை ஈர்த்தது. அது மட்டுமின்றி, தேநீர் பருக வருமாறு திரு வோங்கிற்கு எக்ஸ் பயனர்களிடமிருந்து அழைப்புகள் வந்தன.

சைமன் வோங்கின் பதிவில் இடம்பெற்றது என்ன?

‘இந்தியாவில் சிங்கப்பூர்’ என்ற அப்பதிவில், “சாத்தியமில்லாதது நடந்துவிட்டது. குருகிராமில் ருசியே இல்லாத ஒரு கப் தேநீரை நான் அருந்தினேன். வரியுடன் சேர்த்து ரூ.169,” என்றார் அவர்.

அவரின் பதிவுக்குப் பதிலளித்த சாயோஸ் நிறுவனர் நிதின், தேநீர் பருக வருமாறு திரு வோங்கிற்கு அழைப்பு விடுத்தார்.

“மாண்புமிகு திரு வோங், நான் சாயோஸ் நிறுவனர் நிதின்! இந்தியா-எஸ்ஜி ஆழமான நட்பின் பேரில், உங்களுக்கு அருகேயுள்ள சாயோஸ் கடையில் தேநீர் அருந்த உங்களுக்கு அழைப்பு விடுக்கிறேன். ஒவ்வொரு கப் தேநீரையும் சரியாக வழங்குவதில் எங்கள் கடப்பாட்டை நான் உறுதிசெய்கிறேன். எந்தக் கேள்வியும் கேட்காமல், தேநீரை மாற்றித் தரும் கொள்கையும் அதில் அடங்கும்!” என்றார் அவர்.

தமது நோக்கத்தை தெளிவுபடுத்தினார் வோங்

இந்நிலையில், சாயோஸ் நிறுவனத்தை விமர்சிக்கும் நோக்கத்தில் தாம் அப்பதிவை வெளியிடவில்லை என திரு வோங் தெளிவுபடுத்தினார்.

திரு சலுஜாவின் அழைப்புக்குப் பதிலளித்த அவர், “கனிவன்புடன் அழைப்பு விடுத்ததற்கு உங்களுக்கு எனது நன்றி. தொழிற்சாலை நிலத்தைப் பார்க்க நான் செக்டர் 59க்குச் சென்றேன். எனக்கு அருகில் இருக்கும் சிறந்த தேநீர் கடையை நான் கூகலில் தேடியபோது அக்கடையைக் கண்டறிந்தேன். மற்றபடி, குறைகூற வேண்டும் என்பது என் நோக்கமன்று,” என்றார்.

கருத்தை ஏற்ற சாயோஸ் நிறுவனர்

திரு வோங்கின் கருத்தைக் கனிவன்புடன் ஏற்றுக்கொண்ட திரு சலுஜா, “மாண்புமிகு திரு வோங், கூகல் காட்டியது சரியே. உங்களுக்கு அருகிலுள்ள ஆகச் சிறந்த தேநீர் கடை நாங்களே!

“என்றாலும், இன்று உங்களது தேநீரில் குளறுபடி நடந்துவிட்டதுபோல் தெரிகிறது. வானிலை காரணமாக, ஒரு நாளைக்குப் பலமுறை தேநீர் குடிக்க வேண்டிய சூழல் உள்ளது. எனவே, உங்களுடன் சேர்ந்து தேநீர் அருந்த நான் ஆவலுடன் உள்ளேன். அப்போது அதுகுறித்து உங்கள் கருத்துகளை நீங்கள் முன்வைக்கலாம்,” என்றார்.

தேநீர் அருந்த ஏராளமானோர் அழைப்பு

திரு வோங்கின் அந்தப் பதிவால், தேநீர் அருந்தக் கோரி இந்தியா முழுவதுமிருந்து மக்கள் ஏராளமானோரிடமிருந்து திரு வோங்கிற்கு அழைப்புகள் குவியத் தொடங்கின.

அதற்குப் பதிலளித்த திரு வோங், “இந்தியாவின் உண்மையான அழகே, அதன் மக்களிடம் உள்ளது. வீட்டில் தயாரிக்கப்படும் ஆகச் சிறந்த தேநீரைப் பருகக் குவியும் அழைப்புகள் என்னை உணர்ச்சியில் ஆழ்த்தியுள்ளன. உங்கள் அனைவருக்கும் நான் தாழ்மையுடன் நன்றி கூறுகிறேன்,” என்றார்.

குறிப்புச் சொற்கள்