சீருடையில் காணொளி எடுத்த பயிற்சி காவலர்களுக்கு நோட்டீஸ்: ஒழுங்கு நடவடிக்கை தீவிரம்

சீருடையில் காணொளி எடுத்த பயிற்சி காவலர்களுக்கு நோட்டீஸ்: ஒழுங்கு நடவடிக்கை தீவிரம்

2 mins read
883c18d2-6382-45a0-8742-ff45b7770329
அனில், ஆனந்த், பிரதீப் யாதவ், ராஜ்குமார், கோனு, சுர்ஜீத் ஆகிய இந்த ஆறு பயிற்சிக் காவலர்களும் இணைந்து காணொளி வெளியிட்டுள்ளதை அடுத்து நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. - படம்: என்டிடிவி

ரேவா: மத்தியப் பிரதேச மாநிலம், ரேவாவில் உள்ள காவலர் பயிற்சிப் பள்ளியில் பயிற்சி பெற்று வரும் ஆறு பயிற்சிக் காவலர்கள், காவல் சீருடையில் சமூக வலைத்தளங்களுக்காக ‘ரீல்ஸ்’ காணொளி எடுத்து வெளியிட்ட விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

காவல்துறையின் கண்ணியத்தைக் குலைக்கும் வகையில் செயல்பட்டதாகக் கூறி, அவர்கள் ஆறு பேருக்கும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

காவல்துறையில் பணியாற்றுபவர்கள் சீருடையில் இருக்கும்போது தனிப்பட்ட முறையில் ‘ரீல்ஸ்’ காணொளிகளை எடுத்து சமூக வலைத்தளங்களில் பகிரக்கூடாது என்று போபால் தலைமையகம் ஏற்கெனவே கடும் உத்தரவு பிறப்பித்திருந்தது.

மேலும், பயிற்சியின்போது பயிற்றுவிப்பாளர்களும் இது குறித்துப் பலமுறை எச்சரித்திருந்தனர்.

இருப்பினும், அனில், ஆனந்த், பிரதீப் யாதவ், ராஜ்குமார், கோனு, சுர்ஜீத் ஆகிய ஆறு காவலர்களும் இணைந்து இந்தக் காணொளியை எடுத்துள்ளனர்.

“நான் பார்க்க அழகாக இல்லையென்றால் என்ன? என்னிடம் அரசு வேலை இருக்கிறது.

“என்னிடம் பணம் இல்லையென்றால் என்ன? மாதந்தோறும் சம்பளம் வருகிறது.

“என்னிடம் ஆடைகள் இல்லையென்றால் என்ன? என்னிடம் சீருடை இருக்கிறது,” என்ற வசனத்தைப் பேசி இந்தக் காணொளியை அவர்கள் பதிவேற்றியுள்ளனர்.

எக்ஸ் தளத்தில் பகிரப்பட்ட இந்தக் காணொளி சில மணி நேரங்களிலேயே ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட பார்வைகளைப் பெற்று பரவியது.

இது காவல்துறையின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிப்பதாகப் பல்வேறு தரப்பினரும் விமர்சனங்களை முன்வைத்தனர்.

இதையடுத்து, ரேவா காவலர் பயிற்சிப் பள்ளியின் கண்காணிப்பாளர் சுரேந்திர குமார் ஜெயின், சம்பந்தப்பட்ட ஆறு காவலர்களுக்கும் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

அதில், “உங்கள் வசனங்களும் செயல்பாடுகளும் காவல்துறையின் கண்ணியத்தைச் சீர்குலைத்துள்ளன. உங்கள் மீது ஏன் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கக்கூடாது?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

இதற்கு முறையான விளக்கம் அளிக்காவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்