தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

நேப்பாளத்தைச் சேர்ந்த குற்றவாளி டெல்லியில் சுட்டுக்கொலை

1 mins read
b61caa5b-379d-43a9-8d85-d3fdeeed28ce
பீம் ஜோராவும் (வலது) அவரைச் சுட்டுக்கொன்ற காவல்துறையினரும். - படங்கள்: இந்திய ஊடகம்

புதுடெல்லி: கொலை, ஆயுதமேந்திய கொள்ளை உள்ளிட்ட பல குற்றச்செயல்கள் தொடர்பில் தேடப்பட்டு வந்த நேப்பாளத்தைச் சேர்ந்த ஆடவர் ஒருவரை டெல்லி - குருகிராம் காவல்துறையினர் செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 7) சுட்டுக்கொன்றனர்.

பீம் மகாபகதூர் ஜோரா, 39, என்ற அந்த ஆடவர் நேப்பாளத்தின் லால்பூர் பகுதியைச் சேர்ந்தவர். ஒரு கொலைச் சம்பவத்திலும் டெல்லி, குருகிராம், குஜராத், பெங்களூரு போன்ற பகுதிகளில் நடந்த கொள்ளைச் சம்பவங்களிலும் அவருக்குத் தொடர்பிருப்பதாகக் கூறப்பட்டது.

கடந்த 2024 மே மாதம் டெல்லியின் ஜங்புரா பகுதியில் யோகேஷ் சந்தர் பால் என்ற மருத்துவரின் கொலை தொடர்பில் ஜோராவைக் காவல்துறை தேடிவந்தது.

அவரைப் பற்றிய தகவல் தருவோர்க்கு நூறாயிரம் ரூபாய் வெகுமதி அளிக்கப்படும் என்றும் அதிகாரிகள் அறிவித்திருந்தனர்.

இந்நிலையில், தங்களுக்குக் கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில், குருகிராம் மற்றும் டெல்லி காவல்துறையினரின் கூட்டுப்படை இரவு 12.20 மணியளவில், டெல்லியிலுள்ள ஆஸ்தா குஞ்ச் பூங்கா அருகே ஜோராவை இடைமறித்தது.

அப்போது, அவர் தங்களை நோக்கி ஆறுமுறை சுட்டதாகவும் தாங்கள் ஐந்துமுறை திருப்பிச் சுட்டதில் குண்டு பாய்ந்து அவர் மாண்டுபோனதாகவும் காவல்துறை தெரிவித்தது.

அவரிடமிருந்து நவீன கைத்துப்பாக்கி ஒன்றையும் பூட்டை உடைத்துத் திருடுவதற்காக வைத்திருந்த கருவிகள் அடங்கிய பையையும் அதிகாரிகள் கைப்பற்றினர்.

குறிப்புச் சொற்கள்