நவம்பர் 1 முதல் அழைப்பவரின் உண்மைப் பெயர் கைப்பேசித் திரையில் தோன்றும்

தொலைபேசி மோசடிகளைத் தடுக்க நடவடிக்கை

நவம்பர் 1 முதல் அழைப்பவரின் உண்மைப் பெயர் கைப்பேசித் திரையில் தோன்றும்

கோப்புப் படம்: சமயம் தமிழ்

15 Oct 2026 - 10:13 pm

1 mins read

புதுடெல்லி: அழைப்புகள், கைப்பேசி வழியாக நடைபெறும் மோசடிகளைத் தடுக்கும் பொருட்டு, அழைப்பவரின் உண்மைப் பெயர் திரையில் தோன்றுவதை உறுதிசெய்யும் புதிய உத்தரவை இந்திய மத்திய தொலைத்தொடர்புத் துறை பிறப்பித்துள்ளது.

வரும் நவம்பர் 1ஆம் தேதி முதல் ஏர்டெல், ஜியோ, வோடபோன், ஐடியா உள்ளிட்ட அனைத்து தொலைத்தொடர்பு சேவைகளுக்கும் இந்த நடைமுறை கட்டாயமாக்கப்படுகிறது.

தற்போது பயன்படுத்தப்படும் ‘ட்ரூ காலர்’ போன்ற செயலிகளில் பயனர்கள் தாங்களாகவே பதிவிடும் பெயர்களே திரையில் தோன்றும் குறைபாடு உள்ளது. இதனைச் சாதகமாகப் பயன்படுத்தி மோசடிக் கும்பல்கள் ஏமாற்றி வந்த நிலையில், அதற்கு முற்றுப்புள்ளி வைக்க ‘சிஎன்ஏபி’ எனும் அதிநவீன தொழில்நுட்பத்தை இந்திய அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ளது.

இத்தொழில்நுட்பம் தொலைத்தொடர்பு நிறுவனங்களின் கட்டமைப்புகளுடன் நேரடியாக இணைக்கப்பட்டிருக்கும். வாடிக்கையாளர்கள் ஆதார் உள்ளிட்ட ஆவணங்களைச் சமர்ப்பித்து சிம் அட்டை வாங்கும்போது என்ன பெயர் பதிவு செய்யப்பட்டுள்ளதோ, அந்த அதிகாரபூர்வ பெயர் மட்டுமே இனி அழைப்பின் போது திரையில் தோன்றும்.

போலிப் பெயர்களைப் பயன்படுத்தி அதிகாரிகள்போல் ஏமாற்றுவது இனி சாத்தியமில்லை.

இதன்மூலம் தேவையில்லாத விளம்பர அழைப்புகள், மிரட்டல் அழைப்புகளை எளிதாகப் புறக்கணிக்க முடியும் என்பதோடு, இணைய நிதி மோசடிகளும் பெருமளவு குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முதற்கட்டமாகப் புதிய 4ஜி, 5ஜி சிம் அட்டைகள், ஸ்மார்ட்போன்களில் இச்சேவை முழுமையாக நடைமுறைப்படுத்தப்படும். தொடர்ந்து, 2ஜி, 3ஜி கட்டமைப்பைப் பயன்படுத்தும் பழைய கைப்பேசிகளிலும் படிப்படியாக அமல்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்
இந்தியாகைப்பேசிஅடையாளம்மோசடிஇணைய மோசடிபோலி