புதுடெல்லி: குழாய்வழி எரிவாயு கிடைத்தால் பொதுமக்கள் அதைப் பயன்படுத்த வேண்டும் என்றும் இல்லையெனில் எல்பிஜி எனப்படும் சமையல் எரிவாயுக்கலன் விநியோகத்தை இழக்க நேரிடும் என்றும் இந்திய அரசு அறிவித்துள்ளது.
மத்திய கிழக்கு மோதல் காரணமாக இந்தியா கடும் எரிவாயு பற்றாக்குறையை எதிர்கொண்டுள்ளது.
இதையடுத்து, குழாய்வழி விநியோகிக்கப்படும் எரிவாயு (பிஎன்ஜி) கிடைக்கும் இடங்களில், அதற்கான இணைப்பைப் பெற்று பயன்படுத்த வேண்டும் என நுகர்வோருக்கு இந்திய அரசு செவ்வாய்க்கிழமை (மார்ச் 24) அறிவுறுத்தி உள்ளது.
மேலும், குழாய்வழி இயற்கை எரிவாயு கிடைக்கும் பகுதிகளில் வசிப்போர் அதற்கான இணைப்பைப் பெறாவிட்டால், சம்பந்தப்பட்ட நுகர்வோர்க்கு எரிவாயுக் கலன் (எல்பிஜி) விநியோகம் முற்றிலும் துண்டிக்கப்படும். இதற்கான காலக்கெடுவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அரசு பிறப்பித்துள்ள புதிய உத்தரவின்படி, நுகர்வோர் குழாய்வழி இயற்கை எரிவாயு இணைப்புக்கு மாறுவதற்கு மூன்று மாதங்கள்வரை அவகாசம் வழங்கப்படும்.
குழாய்வழி எரிவாயு விநியோகம் உள்ள இடத்தில் வசிக்கும் ஒருவருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்ட தேதியில் இருந்து மூன்று மாதங்களுக்குப் பிறகு எல்பிஜி விநியோகம் நிறுத்தப்படும்.
ஒருவேளை எரிவாயு விநியோகிக்கும் நிறுவனம், குழாய்வழி எரிவாயு இணைப்பு வழங்குவது தொழில்நுட்ப ரீதியில் இயலாத செயல் என்று குறிப்பிட்டு தடையில்லாச் சான்று வழங்கினால் மட்டுமே எல்பிஜி சேவை தொடரும் என்கிறது இந்திய அரசின் புதிய அறிவிப்பு.
இதனிடையே, நாடு முழுவதும் எரிவாயுக் குழாய்களை அமைக்கும் பணி விரைவுபடுத்தப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
குழாய்கள் பதிப்பதற்கு குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் அனுமதி வழங்கப்பட வேண்டும் என்றும் அரசு கூறியுள்ளது. மேலும், நிர்ணயிக்கப்பட்டதைவிட கூடுதல் கட்டணம் விதிப்பதற்கும் அதிகாரிகளுக்குத் தடைவிதிக்கப்பட்டுள்ளது.
தயார்நிலையில் உள்ள குடியிருப்புகளில் விண்ணப்பித்த 48 மணிநேரத்துக்குள் பிஎன்ஜி இணைப்பு வழங்கப்பட வேண்டும் என பெட்ரோலியம், இயற்கை எரிவாயு அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்தியா முழுவதும் லட்சக்கணக்கானோர் இதுவரை எரிவாயுக் கலன்களைப் பயன்படுத்தி அன்றாடச் சமையலைக் கவனித்து வந்தனர். இனி அவர்கள் சமைக்கும் முறை மாறக்கூடும்.
மேலும், குழாய் எரிவாயு என்பது தவிர்க்கமுடியாத ஒரு தேர்வாகவும் உருவெடுத்துள்ளது.

