புதுடெல்லி: திருமண நிகழ்வில் கலந்துகொள்வதற்காகத் தாய்நாடு சென்ற வெளிநாடுவாழ் இந்தியர் ஒருவரிடமிருந்து பறிமுதல் செய்த தங்க நகையை அவரிடமே திரும்ப ஒப்படைக்கும்படி டெல்லி உயர் நீதிமன்றம், சுங்கத்துறைக்கு உத்தரவிட்டுள்ளது.
அந்த வெளிநாடுவாழ் இந்தியர் கடந்த 2024 ஏப்ரல் 9ஆம் தேதி ஐக்கிய அரபுச் சிற்றரசுகளிலிருந்து (யுஏஇ) டெல்லி இந்திரா காந்தி அனைத்துலக விமான நிலையத்தைச் சென்றடைந்தார்.
அங்கு அவரை இடைமறித்த சுங்கத்துறை அதிகாரிகள் அவர் அணிந்திருந்த 28 கிராம் தங்கச் சங்கிலியைப் பறிமுதல் செய்தனர்.
அது தன்னுடைய தனிப்பட்ட உடைமை என்றும் தான் சுங்கத்துறையை ஏமாற்றிவிட்டுச் செல்பவர் அல்லர் என்றும் அப்பயணி அதிகாரிகளிடம் வாதிட்டார்.
அத்துடன், கேரளத்தில் நடைபெறவுள்ள தம் நண்பரின் திருமண நிகழ்வில் கலந்துகொள்வதற்காக வருவதால் தான் அந்நகையை அணிந்துவந்துள்ளதாகவும் அவர் எடுத்துச்சொன்னார்.
ஆயினும், அவர் கூறிய எதனையும் செவிமடுக்காத சுங்கத்துறை, அவரது நகையைப் பறிமுதல் செய்தது.
அதனைத் தொடர்ந்து, அந்தத் தங்கச் சங்கிலி தனது சொந்த உடைமை என்று அவர் அப்போதே ஒரு கடிதம் எழுதிக்கொடுத்தார். பின்னர் 2024 மே 9ஆம் தேதி பயண உடைமைகள் சட்டம் 2016ன்கீழ் தான் ஒரு தகுதியுடைய பயணி எனக் குறிப்பிட்டும் அவர் ஒரு கடிதம் அனுப்பினார்.
ஆனால், அவர் 18,000 ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும் என்றும் 120 நாள்களுக்குள் ரூ.25,000 செலுத்திவிட்டு நகையைத் திரும்ப எடுத்துச் செல்லலாம் என்றும் குறிப்பிட்டு, 2024 நவம்பர் 7ஆம் தேதி டெல்லி விமான நிலைய மூன்றாம் முனையத்தின் சுங்கத்துறை உதவி ஆணையர் உத்தரவிட்டார்.
தொடர்புடைய செய்திகள்
அதனைத் தொடர்ந்து, டெல்லி உயர் நீதிமன்றத்தை நாடினார் அந்த வெளிநாடுவாழ் இந்தியர்.
அவரது சார்பில் முன்னிலையான வழக்கறிஞர், கேள்விக்கு உள்ளாக்கப்பட்ட தங்கச் சங்கிலி தம்முடைய கட்சிக்காரரின் சொந்த உடைமை எனக் கூறி, முன்னர் அவர் அதனை அணிந்திருந்ததற்கான புகைப்படத்தையும் சமர்ப்பித்தார்.
சுங்கத்துறையிடம் குறிப்பிட்டபடி, 2024 ஏப்ரல் 21ஆம் தேதி இடம்பெற்ற திருமண நிகழ்விற்கான அழைப்பிதழையும் அதில் அவர் கலந்துகொண்டதற்கான சான்றுகளையும் அவ்வழக்கறிஞர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.
அவரது வாதத்தை ஏற்றுக்கொண்ட உயர் நீதிமன்றம், பயண உடைமைகள் 2016 விதிமுறைகளின்கீழ் தகுதியுள்ள பயணி ஒருவருக்கான நலன்கள் அனைத்தையும் பெற வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கு உரிமையுண்டு என்றும் அதனால் அவர்களின் தனிப்பட்ட உடைமைகளைப் பறிமுதல் செய்ய முடியாது என்றும் 2025 மார்ச் 10ஆம் தேதி தீர்ப்பளித்தது.
மேலும், சுங்கத்துறையின் பறிமுதல் உத்தரவை ரத்துசெய்ததோடு, தண்டத்தொகை என எதையும் அப்பயணி செலுத்தத் தேவையில்லை என்றும் நீதிமன்றம் தனது தீர்ப்பில் குறிப்பிட்டது.
பயண உடைமைகள் 2016 விதிமுறைகளின்படி, தகுதியுள்ள பயணி என்பது இந்தியா செல்லும்போது தீர்வை செலுத்த தேவையில்லாத சலுகைகளையும் பயண உடைமைகள் சார்ந்த சலுகைகளையும் பெறத் தகுதியான ஒருவரைக் குறிக்கிறது.
அதன்படி, வெளிநாட்டில் குறிப்பிட்ட காலம் இருந்த பின்னர் தாய்நாடு திரும்பும் இந்தியக் குடிமகன், இந்தியாவில் வசித்துவரும் நிலையில் வெளிநாடு சென்றுவிட்டு இந்தியா திரும்பும் வெளிநாட்டவர், இந்தியாவிற்குச் செல்லும் சுற்றுப்பயணி (வெளிநாட்டவர்) ஆகியோரைத் தகுதியுள்ள பயணிகள் எனக் கருதலாம் என்று டெல்லி உயர் நீதிமன்ற வழக்கறிஞர் ஷஷாங்க் அகர்வால் கூறினார்.

