அமராவதி: குவைத்தில் பணியாற்றி வரும் இந்தியர் ஒருவர், ஆந்திர மாநிலத்திலுள்ள தமது சொந்த ஊருக்குச் சென்று, தம்முடைய குறைந்த வயது மகளுக்குப் பாலியல் தொல்லை தந்த உறவினரைக் கொலைசெய்தார்.
ஆஞ்சநேய பிரசாத், 35, என்ற அந்த ஆடவர், அண்மையில் குவைத்திலிருந்து சொந்த ஊர் திரும்பியதாகவும் தம் மகளுக்குப் பாலியல் தொல்லை தந்தவரை இரும்புக் கம்பியால் அடித்துக் கொன்றதாகவும் ‘பிடிஐ’ செய்தி தெரிவித்தது.
கொல்லப்பட்ட ஆஞ்சநேயலு, 59, உடற்குறையுள்ளவர் என்று காவல்துறை அதிகாரி என். சுதாகர் கூறினார்.
ஆஞ்சநேயலுவைக் கொன்றபின் மீண்டும் குவைத் திரும்பிய பிரசாத், தான் கொலை செய்த குற்றத்தை அங்கிருந்தபடி காணொளிமூலம் தெரியப்படுத்தினார்.
பாலியல் தொல்லை குறித்து தம் மகள் புகார் அளித்தும் காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை என்று அவர் காணொளியில் தெரிவித்துள்ளார்.
தன் மனைவியுடன் குவைத்தில் வசித்து வருகிறார் பிரசாத். அதனால், முதலில் தாத்தா - பாட்டியுடன் வசித்துவந்த அவர்களின் 12 வயது மகள், பின்னர் தன் சிற்றன்னை - சிற்றப்பா வீட்டில் வசிக்கத் தொடங்கினார்.
அப்போது, தன் சிற்றன்னையின் மாமனார் தனக்குப் பாலியல் தொல்லை தருவதாகச் சிற்றன்னையிடமே அச்சிறுமி கூறினாள். ஆனால், அதுபற்றி வெளியில் யாரிடமும் சொல்லக்கூடாது என்று அச்சிறுமியிடம் அவரது சிற்றன்னை அறிவுறுத்தியாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில். திடீரென தொலைபேசியில் பிரசாத்தையும் அவரின் மனைவியையும் தொடர்புகொண்ட அந்தச் சிற்றன்னை, குடும்பத்தில் பிரச்சினை ஏற்பட்டுள்ளதால் அவர்களின் மகளை அழைத்துச் செல்லும்படி கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
அதன்படி, அச்சிறுமியும் குவைத் சென்றாள். அங்கு சென்றபின் தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து அவள் தன் பெற்றோரிடம் விவரித்தாள்.
அதனைத் தொடர்ந்து, ஆந்திரக் காவல்துறையிடம் பிரசாத்தின் மனைவி புகாரளித்தார். ஆனால், குற்றம் புரிந்தவர்மீது நடவடிக்கை எடுக்காமல், பிரச்சினையைச் சுமுகமாக முடிக்கவே காவல்துறை முயன்றதாக பிரசாத் குற்றஞ்சாட்டினார்.
“என் மகளுக்குத் தொல்லை தந்தவரைக் காவல்துறை எச்சரித்து விடுவித்துவிட்டது,” என்று ‘தி ஸ்டேட்ஸ்மேன்’ ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
இறுதியில், அப்பிரச்சினைக்குத் தானே முடிவுகட்டுவது எனத் தீர்மானித்த பிரசாத், இந்தியா சென்று, தன் மகளிடம் தகாத முறையில் நடந்துகொண்டவரைத் தீர்த்துக்கட்டினார்.
குற்றத்தை ஒப்புக்கொண்ட பிரசாத்மீது காவல்துறை வழக்கு பதிந்து, அவரைத் தீவிரமாகத் தேடி வருகிறது.

