புவனேஷ்வர்: அணுவாயுதங்களைச் சுமந்துகொண்டு கண்டம் விட்டு கண்டம் பாயும் ‘அக்னி 5’ ஏவுகணை சோதனையை இந்தியா வெற்றிகரமாக நடத்தியது.
புதன்கிழமையன்று (ஆகஸ்ட் 20) ஒடிசாவின் சந்திப்பூர் மாவட்டத்தில் உள்ள ஒருங்கிணைந்த சோதனைத் தளத்தில் அச்சோதனை மேற்கொள்ளப்பட்டதாக இந்திய அரசின் தற்காப்பு அமைச்சு தெரிவித்தது. மேலும், தொழில்நுட்ப ரீதியிலும் செயல்பாட்டு ரீதியிலும் அளவீடுகள் சிறப்பாக இருந்ததாக அமைச்சு சொன்னது.
திட எரிபொருளைக் கொண்டு இயக்கப்படும் இந்த ஏவுகணையானது மூன்று நிலைகளை உடையது. சாலை மூலமாக வாகனங்களில் கொண்டு செல்லும் வசதியையும் கொண்டது.
உலகின் அதிவேகமான ஏவுகணைகளில் இதுவும் ஒன்று. இந்த ஏவுகணை மணிக்கு 29,000 கிலோ மீட்டர் வேகத்தில் பாய்ந்து சென்று இலக்கைத் தாக்கும் வல்லமை படைத்தது.
அணு ஆயுதங்களை ஏந்திக்கொண்டு 5 ஆயிரம் கிலோமீட்டர் தூரம்சென்று தாக்கும் திறன் கொண்ட ‘அக்னி 5’ ஏவுகணை, சீனாவின் எந்தப் பகுதிக்கும் அணு ஆயுதத்தை எடுத்துச் செல்லும் திறன் கொண்டது என இந்தியா தெரிவித்தது.
உலகின் அதிக மக்கள்தொகை கொண்ட நாடுகளின் வரிசையில் முதல் இரு இடங்களில் இருக்கும் இந்தியாவும் சீனாவும் 2020ஆம் ஆண்டு நடந்த எல்லை மோதலுக்குப் பிறகு சரிந்த தங்கள் செல்வாக்கை மீட்டெடுக்க கடும்போட்டியில் ஈடுபட்டுள்ளன.
அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான், இந்தியா ஆகிய நான்கு நாடுகளும் ‘குவாட்’ எனும் தற்காப்பு தொடர்புடைய அரசதந்திர பங்காளிகளாக உள்ளன. இந்தக் கூட்டணி சீனாவிற்கு எதிரானதாகக் கருதப்படுகிறது.
இந்தியாவுடன் நீண்ட காலமாக மோதலில் ஈடுபட்டு வரும் பாகிஸ்தானிடமும் அணு ஆயுதங்கள் உள்ளன. மேலும், இந்திய அரசின் அதிகாரத்திற்கு உட்பட்ட காஷ்மீரில் 26 பேரைக் கடந்த மே மாதம் தீவிரவாதிகள் சுட்டுக்கொன்றனர்.
தொடர்புடைய செய்திகள்
இந்தத் தாக்குதலுக்குப் பாகிஸ்தானை இந்தியா குற்றம் சாட்டியது. இந்தியாவின் குற்றச்சாட்டை பாகிஸ்தான் திட்டவட்டமாக மறுத்தது.