அணு ஆயுதங்களைப் போலவே ‘ஏஐ’யும் ஆபத்தானது: ஜெய்சங்கர் எச்சரிக்கை

2 mins read
aca45e62-f0cd-41eb-9483-3b6c894cf647
இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர். - படம்: ஏஎன்ஐ

புதுடெல்லி: அணு ஆயுதங்களைப் போலவே ‘ஏஐ’ எனப்படும் செயற்கை நுண்ணறிவும் உலகிற்கு ஆபத்தாக முடியும் என இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். புதுடெல்லியில் ஞாயிற்றுக்கிழமை நடந்த கவுடில்ய பொருளியல் மாநாட்டில் பேசிய அவர், செயற்கை நுண்ணறிவால் ஏற்படும் விளைவுகளைச் சந்திக்க உலக நாடுகள் தயாராக இருக்க வேண்டும் என்றார்.

மேலும், அனைத்து நாடுகளையும் அழிக்கும் ஆயுதமாக உலகமயமாக்கல் மாறலாம் எனவும் உலக நாடுகள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் எனவும் திரு ஜெய்சங்கர் கூறியுள்ளார்.

“உலகமயமாக்கல் உலக மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்தியுள்ளது. சிலர் வேலைவாய்ப்பின்மை, பிற எதிர்மறையான தாக்கங்களுக்காக உலகில் ஏற்படும் பொருளியல் மாற்றங்களைக் குற்றம் சாட்டுகின்றனர். உலகமயமாக்கல் இருக்கும் வரை இந்தப் பிரச்சினையும் இருக்கும்,” என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மாறிவரும் உலகளாவிய சூழலில், ஐக்கிய நாட்டு நிறுவனத்தின் (ஐ.நா) நிலைப்பாடு பற்றிய கேள்விக்கு, “அந்நிறுவனம் நடப்பு நிலைக்கு ஏற்ப இல்லாமல் பழமையானது போன்று உள்ளது. செயல்பாட்டில் சிறந்த ஒன்றாக இல்லை. முக்கிய விவகாரங்களில் எந்தவித நடவடிக்கையும் அது எடுக்காதபோது, நாடுகள் தங்களுடைய சொந்த முயற்சிகளை மேற்கொண்டு தீர்வுகளைக் காண்கின்றன,” என்று அவர் பதிலளித்தார்.

“குறிப்பாக, கடைசி 5 முதல் 10 ஆண்டுகளை பாருங்கள். நம்முடைய வாழ்க்கையில் நடந்த மிக முக்கிய நிகழ்வு கொவிட்-19 கொள்ளை நோய். கொவிட் தொற்றின்போது ஐ.நாவின் நிலைப்பாடு என்ன?,” என்று வினவினார்.

“எனக்குத் தெரிந்து எந்த முடிவும் ஐநா எடுக்கவில்லை. உலகில் தற்போது இரண்டுத் தீவிர மோதல்கள் நடந்து கொண்டிருக்கின்றன. அதற்கான தீர்வு எதையும் ஐநா எடுக்கவில்லை. மாறாக, பக்கத்தில் நின்று கொண்டிருக்கும் ஒரு பார்வையாளர் போன்று செயல்படுகிறது,” என ஐநாவை சாடினார் ஜெய்சங்கர்.

எனினும், காலமாற்றத்திற்கு ஏற்ப, ஐக்கிய நாட்டு நிறுவனத்தையும் ஐக்கிய நாட்டுப் பாதுகாப்பு மன்றத்தையும் சீர்திருத்தங்களை மேற்கொள்ளும்படி இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்