மும்பை: தமிழகத்தில் தயாரிக்கப்பட்ட ‘கோல்டிரிஃப்’ எனும் இருமல் மருந்தால் மத்தியப் பிரதேச மாநிலம் சிந்த்வாரா மாவட்டத்தில் உயிரிழந்த குழந்தைகள் எண்ணிக்கை 20 ஆக அதிகரித்துள்ளது.
திங்கள், செவ்வாய்க்கிழமைகளில் இரு குழந்தைகள் இறந்துவிட்டதாகவும் மேலும் 5 குழந்தைகள் சிறுநீரகச் செயலிழப்பு காரணமாக சிகிச்சை பெற்று வருவதாகவும் மத்தியப் பிரதேச துணை முதல்வர் ராஜேந்திர சுக்லா கூறினார்.
இருமல் மருந்தை உட்கொண்ட பின்னர் குழந்தைகளுக்குக் கடுமையான வாந்தி, சிறுநீர் கழிப்பதில் சிக்கல் ஏற்பட்டதாக மருத்துவர்கள் கூறினர்.
பெயிண்ட், மை, ரெசின், டை போன்றவை தயாரிக்கப் பயன்படுத்தப்படும் ‘டைஎத்திலீன் கிளைக்கால்’ எனும் நச்சுத்தன்மையுள்ள ரசாயனப் பொருள் இருமல் மருந்தில் அதிகமாக கலக்கப்பட்டுள்ளது ஆய்வில் தெரியவந்துள்ளது. இது குழந்தைகளின் சிறுநீரகத்தைப் பாதித்துள்ளது.
தமிழ்நாடு, மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் கோல்டிரிஃப்’ இருமல் மருந்துக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், மருந்தைத் தயாரித்த ஸ்ரீசென் பார்மா நிறுவனத்தின் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு அந்த நிறுவனமும் மூடப்பட்டுள்ளது.
குழந்தைகளுக்கு ‘கோல்டிரிஃப்’ மருந்தைப் பரிந்துரைத்த டாக்டர் சோனி கைது செய்யப்பட்டுள்ளதற்கு எதிர்ப்புத் தெரிவித்தும் அவரை உடனடியாக விடுவிக்கக்கோரியும் மத்தியப் பிரதேசத்தில் மருத்துவர்கள் போராட்டம் நடத்துகின்றனர். டாக்டர் சோனி மீதான குற்றச்சாட்டு நியாயமற்றது என்று இந்திய மருத்துவ சங்கமும் தெரிவித்துள்ளது.
டாக்டர் சோனி குற்றவாளி அல்ல, அவர் அதைப் பரிந்துரை மட்டுமே செய்துள்ளார். மருந்தைப் பயன்படுத்த ஒப்புதல் அளித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சங்கம் கூறியுள்ளது.