புதுடெல்லி: மனிதர்களின் நடத்தை காரணமாகவே சாலை விபத்துகள் ஏற்படுவதாக மத்திய சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்துள்ளார்.
கொரோனா பெருந்தொற்று, போர்களில் இறந்தவர்களைவிட, சாலை விபத்துகளில் மேலும் அதிகமானோர் இறப்பதாக அவர் நாடாளுமன்றத்தில் பேசும்போது குறிப்பிட்டார்.
“சாலைப் பாதுகாப்பு விதிகள் குறித்து யாரும் கவலைப்படுவதில்லை. இந்தியாவில் ஆண்டுதோறும் 1.8 லட்சம் பேர் சாலை விபத்துகளில் சிக்கி உயிரிழக்கின்றனர்.
இது கொரோனா பெருந்தொற்று அல்லது போர்களில் இறந்தவர்களைவிட அதிகமாகும். இளம் வயதினர்தான் அதிக அளவில் இறக்கின்றனர்,” என்று நிதின் கட்காரி தெரிவித்தார்.
எம்பிக்கள் தங்களது தொகுதிகளில் சாலைப் பாதுகாப்பு தொடர்பான பிரசாரங்களை நடத்த வேண்டும் என வலியுறுத்திய அவர், போக்குவரத்து விதிகளை தங்களின் வாகனம் ஓட்டும் முறைக்கு தொடர்பில்லாதவை எனக் கருதி மக்கள் புறக்கணிப்பதாலேயே பெரும்பாலான விபத்துகள் நிகழ்கின்றன என்றார்.
இந்தியாவில் சாலை விபத்துகளில் உயிரிழப்போரில் 66%, 18 முதல் 34 வயதுக்கு உட்பட்டவர்கள் எனத் தெரிய வந்துள்ளது.

