புதுடெல்லி: வெளிநாட்டிலிருந்து இந்தியாவுக்கு வரும் பயணிகளின் எண்ணிக்கை 2023ஆம் ஆண்டு உச்சம் தொட்டதாக இந்தியச் சுற்றுலா அமைச்சு தெரிவித்தது.
மேலும், அவர்களின் எண்ணிக்கை அவ்வாண்டு 18.89 மில்லியனாக இருந்ததாகவும் அது முந்தைய சாதனையான 2019ஆம் ஆண்டில் பதிவான 17.91 மில்லியனை விஞ்சியதாகவும் அந்நாட்டு அமைச்சு வெளியிட்ட தகவல்கள் கூறின.
2023ஆம் ஆண்டில் பயணிகளின் வருகை கொவிட்-19 கொள்ளை நோய் காலத்திற்கு முந்தைய காலகட்டத்தில் பதிவான அளவை விட அதிகமாக இருந்தது.
இதன்மூலம், இந்தியச் சுற்றுலாத் துறை 5.47 விழுக்காடு வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
“கொவிட்-19க்குப் பிறகு இந்தியச் சுற்றுலாத் துறை புத்துயிர் பெற்றுள்ள நிலையில், 2023ஆம் ஆண்டு 9.52 மில்லியன் வெளிநாட்டுச் சுற்றுப்பயணிகள் இந்தியாவுக்குப் பயணம் மேற்கொண்டனர். இந்த எண்ணிக்கை கொள்ளை நோய்க்கு முந்தைய காலத்தில் பதிவான எண்ணிக்கையில் 87.06 விழுக்காடு எட்டியுள்ளது,” என அமைச்சு அண்மையில் வெளியிட்ட சுற்றுப்பயணத் தரவு அறிக்கை 2024ல் தெரிவித்துள்ளது.
பிரான்ஸ், ஸ்பெயின், அமெரிக்கா, இத்தாலி, துருக்கி, மெக்சிகோ, இங்கிலாந்து, ஜெர்மனி, கிரீஸ், ஆஸ்திரியா ஆகிய 10 நாடுகளிலிருந்து அதிகமானோர் இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் வருகின்றனர்.

