புதுடெல்லி: எதிர்வரும் 2029ஆம் ஆண்டு நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலையொட்டி, நாடு முழுவதும் வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கையை 46 விழுக்காடு உயர்த்த இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது.
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் எழுப்பப்பட்ட கேள்விக்கு அளித்துள்ள பதிலில், தேர்தல் ஆணையம் இத்தகவலை உறுதி செய்துள்ளது.
கடந்த 2024ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலின்போது நாடு முழுவதும் மொத்தம் 10.52 லட்சம் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டன.
வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு, நிர்வாக வசதிகளைக் கருத்தில் கொண்டு, 2029 தேர்தலில் வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கையை 15.38 லட்சமாக உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இது கடந்த தேர்தலை விட 46 விழுக்காடு கூடுதலாகும்.
தேர்தல் நடத்துவதற்கான உள்கட்டமைப்பை மேம்படுத்தும் பணிகளிலும் தேர்தல் ஆணையம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. 2019ஆம் ஆண்டு தேர்தலின்போது 14.88 லட்சம் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களும் 11.30 லட்சம் கட்டுப்பாட்டு பிரிவு கருவிகளும் பயன்படுத்தப்பட்டன.
தற்போது ஆணையத்திடம் 30.48 லட்சம் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களும் 21.92 லட்சம் கட்டுப்பாட்டுப் பிரிவு கருவிகளும் கையிருப்பில் உள்ளன.
ஒவ்வொரு பொதுத்தேர்தலுக்கு முன்பும் காலாவதியான பழைய இயந்திரங்களை அகற்றிவிட்டு புதிய சாதனங்களை வாங்குவது வழக்கம். அதன் அடிப்படையில், தற்போதுள்ள கையிருப்பில் இருந்து 3.57 லட்சம் பழைய மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களும் 1.25 லட்சம் கட்டுப்பாட்டுப் பிரிவுக் கருவிகளும் நீக்கப்பட உள்ளன.
பழைய கருவிகளுக்குப் பதிலாக, 2029 தேர்தல் பணிகளுக்காக ரூ.486 கோடி செலவில் புதிய மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், ஒப்புகைச் சீட்டு வழங்கும் சாதனங்களை வாங்கத் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்து வருகிறது.
இதன்மூலம் வாக்காளர்கள் சிரமமின்றி விரைவாக வாக்களிக்கும் வசதிகள் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
