சீறும் புனலைக் கண்டு அஞ்சாது கடமையாற்றிய தாதி

1 mins read
a49ba22e-ec8f-4514-8cf2-341eb2c993d6
குழந்தைக்குத் தடுப்பூசி போட பெருக்கெடுத்து ஓடும் ஆற்றைத் தாண்டிச் சென்ற கமலா தேவி. - படம்: இந்திய ஊடகம்

சிம்லா: இந்தியாவின் இமாச்சலப் பிரதேச மாநிலத்தில் அண்மையில் பெய்த கனமழையால் ஆறுகள் பெருக்கெடுத்து ஓடுகின்றன.

சில இடங்களில் நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளன. இதன் காரணமாகச் சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், மண்டி மாவட்டம் சுதார் கிராமத்தில் உள்ள ஆரம்ப சுகாதார மையத்தில் தாதியாகப் பணி புரியும் கமலா தேவி (40), ஸ்வார் சுகாதார துணை மையத்துக்கான பொறுப்பையும் கூடுதலாக கவனித்து வருகிறார்.

இந்த மையத்துக்குட்பட்ட ஒரு கிராமத்தில் புதிதாகப் பிறந்த குழந்தைக்குத் தடுப்பூசி போடுவதற்காக உயிரைப் பணயம் வைத்து பெருக்கெடுத்து ஓடிய ஆற்றைக் அவர் கடந்தார்.

அதைக் காட்டும் காணொளி இணையத்தில் பரவி வருகிறது.

ஆறு அதிகளவிலான நீரால் நிரம்பி, வேகமாகப் பாய்ந்து ஓடும் நிலையில் அதற்கு நடுவே ஆங்காங்கே பாறைகள் இருப்பதைக் காணொளி காட்டியது.

அந்த ஆற்றை கடப்பதற்காக, ஒரு கையில் காலணியையும் தோளில் பையையும் சுமந்தபடி ஒரு பாறையிலிருந்து மற்றொரு பாறைக்கு துணிச்சலாக தேவி தாவிச் சென்றார்.

ஒரு வழியாக ஆற்றைக் கடந்து சென்று தடுப்பூசி போட்டு வந்துள்ளார். அந்தக் காணொளியைப் பார்த்த பலரும் கமலா தேவியைப் பாராட்டி வருகின்றனர்.

“குழந்தைக்கு தடுப்பூசி போடுவதற்காக கமலா தேவி துணிச்சலுடன் செயல்பட்டுள்ளார். ஆனால், இதுபோன்று சிக்கலான பயணம் மேற்கொள்வதை தவிர்க்க வேண்டும். முன்கூட்டியே தகவல் தெரிவித்தால் பயண ஏற்பாடுகளை நாங்கள் செய்து தருவோம்’’ என்று இமாச்சலப் பிரதேசத்தின் தலைமை மருத்துவ அதிகாரி தீபாலி சர்மா தெரிவித்துள்ளார்

குறிப்புச் சொற்கள்