சாலையில் நெஞ்சுவலியால் துடித்த ஆடவரைக் காப்பாற்றிய தாதியர்

சாலையில் நெஞ்சுவலியால் துடித்த ஆடவரைக் காப்பாற்றிய தாதியர்

2 mins read
2538937c-886f-4e6f-8849-9f04366b6295
தாதி அஞ்சலி பைஜு, தாதிமை மாணவி ஆர்ட்ரா ராஜ். - படங்கள்: என்டிடிவி

கொச்சி: போக்குவரத்து நெரிசலில் நெஞ்சுவலியால் துடித்த ஒருவருக்கு தாதியர் இருவர் அளித்த அவசர முதலுதவி சிகிச்சையால் அவர் உயிர்பிழைத்தார்.

கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்தைச் சேர்ந்த தாதி அஞ்சலி பைஜு, பெங்களூரு தாதிமைத்துறை மாணவி ஆர்ட்ரா ராஜ் இருவரும் வியாழக்கிழமை (ஜூலை 2) காலை கேரள அரசுப் பேருந்தில் பயணம் செய்தனர்.

காலை 9 மணியளவில் அந்தப் பேருந்து போக்குவரத்து நெரிசலில் சிக்கி நின்றுவிட்டது. கார் ஒன்று அந்த நெரிசலுக்குக் காரணம் என்று கூறப்பட்டது. காரை ஓட்டிச் சென்ற ஆடவர் கடுமையான நெஞ்சுவலியால் துடித்துக்கொண்டு இருந்தார்.

அதனை அறிந்த பொதுமக்கள், யாராவது மருத்துவர் இருக்கிறீர்களா என்று கேட்டபோது பேருந்திலிருந்த தாதியும் மாணவியும் வேகமாக இறங்கிச் சென்று அந்த ஆடவருக்கு ‘சிபிஆர்’ எனப்படும் உயிர்காக்கும் அவசர முதலுதவியைச் செய்தனர்.

ஆம்புலன்ஸ் வாகனம் வரும் வரை அவர்கள் அந்த ஆடவருக்கு முதலுதவியைத் தொடர்ந்தனர். விரைந்து வந்த ஆம்புலன்ஸ் மூலம் அங்கமாலி என்னும் இடத்திலுள்ள எல்எஃப் மருத்துவமனைக்கு அவர் கொண்டு செல்லப்பட்டார்.

உடனடியாகப் பரிசோதித்த மருத்துவர்கள் அந்த ஆடவர் ஆபத்தான கட்டத்தைத் தாண்டிவிட்டதாகவும் உரிய நேரத்தில் வழங்கப்பட்ட ‘சிபிஆர்’ சிகிச்சை அதற்கு உதவியதாகவும் கூறினர். தொடர்ந்து அவர் மருத்துவக் கண்காணிப்பில் வைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுவதாகக் கூறப்பட்டது.

அந்த ஆடவர், தன்னிப்புழா என்னும் இடத்தில் லாட்டரிக் கடை நடத்தும் 43 வயது சினோஜ் என்று அடையாளம் காணப்பட்டார். ஏற்கெனவே இதயத்தில் ‘ஆஞ்சியோபிளாஸ்ட்’ சிகிச்சை செய்துகொண்ட அவர், அடுத்தக்கட்டப் பரிசோதனைக்காகத் தமது காரை ஓட்டிச் சென்றபோது திடீரென்று அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதாகத் தெரிகிறது.

சரியான நேரத்தில் விரைவாகச் செயல்பட்டு ஓர் உயிரைக் காப்பாற்றியதற்காகப் பெண்கள் இருவருக்கும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

குறிப்புச் சொற்கள்