தூத்துக்குடியில் செவிலியர்கள் 3வது நாளாகத் தொடர் போராட்டம்

2 mins read
45ec4ee9-308c-4e81-bba0-9a9ee58e40aa
செவிலியர்கள் நூற்றுக்கணக்கானவர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு, இரவு முழுவதும் மருத்துவமனையில் தூங்கினர். - படம்: விகடன்

தூத்துக்குடி: தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் தொகுப்பூதிய செவிலியர்கள், தங்களைப் பணி நிரந்தரம் செய்யக் கோரி கடந்த மூன்று நாட்களாகத் தொடர் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக, தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 100க்கும் மேற்பட்ட செவிலியர்கள் 3வது நாளாக உள்ளிருப்புப் போராட்டத்தைத் தொடர்ந்து வருகின்றனர்.

2021ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலின் போது, தி.மு.க ஆட்சிக்கு வந்தவுடன் தொகுப்பூதிய செவிலியர்கள் அனைவரும் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் எனத் தேர்தல் வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது.

ஆனால், ஆட்சி அமைந்து நான்கரை ஆண்டுகள் கடந்தும் இதுவரை அதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனச் செவிலியர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இது குறித்துப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள செவிலியர்கள் கூறுகையில், “நாங்கள் கடந்த 10 ஆண்டுகளாகத் தொகுப்பூதிய அடிப்படையில் பணியாற்றி வருகிறோம்.

“அரசு மருத்துவமனைகளில் கட்டடங்கள் மட்டுமே உயருகின்றன, எங்களின் வாழ்வாதாரம் உயரவில்லை. 2023 ஆம் ஆண்டு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் (RTI) படி, தமிழகத்தில் 18,000 செவிலியர் பணியிடங்கள் காலியாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், சுகாதாரத் துறை அமைச்சரோ காலிப் பணியிடங்கள் இல்லை என்று கூறுகிறார்.

“கொரோனா பேரிடர் காலத்தில் எங்களின் உயிரைப் பணயம் வைத்துப் பணியாற்றினோம். அப்போது எங்களைப் பாராட்டிய முதல்வர், இன்று எங்களைப் போராட விட்டுவிட்டுப் பாராமுகமாக இருக்கிறார்.

“தமிழக முதல்வர், துணை முதல்வர், சுகாதாரத் துறை அமைச்சர் உடனடியாக எங்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்,” என்று கூறினர்.

இதற்கிடையில், போராட்டக் குழுப் பிரதிநிதிகளைச் சுகாதாரத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் சந்தித்துப் பேசினார்.

அந்தப் பேச்சுவார்த்தை குறித்துச் சங்கப் பிரதிநிதிகள் கூறுகையில், “அமைச்சர் எங்களின் கோரிக்கைகளைக் காது கொடுத்துக் கேட்கத் தயாராக இல்லை.

“20 நிமிடப் பேச்சுவார்த்தையிலும் அவர் கோபமாகவே பேசினார். ‘தேர்தல் வாக்குறுதி அளித்தால் நிறைவேற்ற வேண்டுமா? இது அரசின் கொள்கை முடிவு’ என்று கூறி எங்களை விரக்தியடையச் செய்துள்ளார்,” எனத் தெரிவித்தனர்.

தமிழ்நாடு முழுவதும் ஏறத்தாழ 8,000 செவிலியர்கள் இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், “நாங்கள் யாரும் பணிக்குத் திரும்பவில்லை, கோரிக்கைகள் நிறைவேறும் வரை எங்கள் போராட்டம் தொடரும்,” என அவர்கள் உறுதிபடத் தெரிவித்துள்ளனர்.

குறிப்புச் சொற்கள்
இந்தியாவேலைபோராட்டம்