காணொளி வாயிலாக நடத்தப்பட்ட விசாரணையில் ஒளிபரப்பான ஆபாசப் படம்

காணொளி வாயிலாக நடத்தப்பட்ட விசாரணையில் ஒளிபரப்பான ஆபாசப் படம்

பிக்சாபே

30 Apr 2026 - 8:34 pm

2 mins read

புதுடெல்லி: புதுடெல்லி உயர் நீதிமன்றத்தில் வாரந்தோறும் புதன்கிழமைகளில் தலைமை நீதிபதி தேவேந்திர குமார் உபாத்யாயா தலைமையிலான அமர்வு விசாரணை நடத்துவது வழக்கம்.

ஏப்ரல் 29ஆம் தேதி, 180 வழக்குகள் விசாரணைக்குப் பட்டியலிடப்பட்டன. வழக்கு ஒன்றை, காணொளி வாயிலாக தலைமை நீதிபதி தேவேந்திர குமாரும் நீதிபதி தேஜஸ் கரியாவும் விசாரித்தனர்.

கணினியுடன் இணைக்கப்பட்ட திரையில் வழக்குக்கு சம்பந்தப்பட்டவர்கள் தோன்றி சாட்சி அளித்தனர். அப்போது, திடீரென திரையில் இரைச்சலான இசையுடன் ஆபாசக் காணொளி ஒன்று ஒளிபரப்பானது.

அதனால், அதிர்ச்சி அடைந்த நீதிமன்ற ஊழியர்கள் உடனடியாக கணினி இணைப்பைத் துண்டித்தனர்.

சிறிது நேரத்திற்குப் பின் மீண்டும் இணைக்கப்பட்ட போது, மறுபடியும் ஆபாசக் காணொளி ஒளிபரப்பானது.

விசாரணை மீண்டும் தொடங்கியபோது, உங்கள் கணக்கு ஊடுருவப்பட்டது என்ற குறிப்பு தோன்றியது. அடுத்தடுத்து ஏற்பட்ட இடையூற்றால் காணொளி வாயிலாக நடத்தப்பட்ட விசாரணை நிறுத்தப்பட்டது.

இந்த இணையத் தாக்குதலால் புதுடெல்லி உயர்நீதிமன்ற நடவடிக்கைகள் முற்றிலும் முடங்கின. இது குறித்து, நீதிமன்ற நிர்வாகம் அளித்த புகாரின்படி, காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

முதற்கட்ட விசாரணையில், நீதிமன்ற அமர்வில் இருந்தபோது மர்ம நபர் ஒருவர் தன் திரையைப் பகிர்ந்து, ஆபாசப் படத்தை இயக்கியது தெரியவந்தது.

ஸ்ரீதர் சர்னோபத், ஷித்ஜீத் சிங் ஆகியோரின் பெயர்களில் கணக்குகள் இயங்கியதை அடுத்து, அவர்களை அடையாளம் காணும் பணி நடைபெற்று வருகிறது.

வரும் காலங்களில், இது போன்ற விசாரணையின் போது கூடுதல் பாதுகாப்பு அம்சங்களை அமல்படுத்துவது குறித்து நீதிமன்ற நிர்வாகம் ஆலோசித்து வருகிறது.

குறிப்புச் சொற்கள்