போலி ஆவணங்கள் மூலம் சிம் அட்டைகள்: மூன்று ஆண்டுகள் சிறை

போலி ஆவணங்கள் மூலம் சிம் அட்டைகள்: மூன்று ஆண்டுகள் சிறை

கோப்புப் படம்: மாலை மலர்

22 Sep 2026 - 4:29 pm

1 mins read

புதுடெல்லி: போலி ஆவணங்களைச் சமர்ப்பித்து புதிய ‘சிம்’ அட்டைகளைப் பெறுவது, பிறர் பெயரில் உள்ள கைப்பேசி இணைப்புகளைச் சட்டவிரோதமாகப் பயன்படுத்துவது போன்ற குற்றங்களில் ஈடுபடுவோருக்கு எதிராக இந்தியத் தொலைத்தொடர்பு அமைச்சு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக விளங்கும் இணையக்குற்றங்கள், இணையவழி நிதி மோசடிகள், ஆள்மாறாட்ட நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தும் நோக்கிலேயே இந்த நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

புதிய தொலைத்தொடர்புச் சட்டத்தின்கீழ், இத்தகைய விதிமீறல்களில் ஈடுபடுவோருக்கு அதிகபட்சமாக மூன்று ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை அல்லது ரூ.50 லட்சம் வரை அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும் என அரசு தெளிவுபடுத்தியுள்ளது.

அண்மையில், சட்டீஸ்கர் மாநிலத்தில் முகவர் ஒருவர் பொதுமக்களின் ஆவணங்களைத் தவறாகப் பயன்படுத்தி 25 போலி சிம் அட்டைகளை விநியோகித்தது கண்டுபிடிக்கப்பட்டு, அவை உடனடியாக முடக்கப்பட்டன.

பொதுமக்கள் தங்களது அடையாள ஆவணங்களின்கீழ் எத்தனை கைப்பேசி எண்கள் செயல்பாட்டில் உள்ளன என்பதை அறிய மத்திய அரசின் ‘சஞ்சார் சாதி’ (Sanchar Saathi) இணையத்தளச் சேவையைப் பயன்படுத்தலாம். அதில் உங்களுக்குத் தெரியாத எண்கள் ஏதேனும் இருந்தால், அவற்றை உடனடியாக முடக்கவோ அல்லது புகார் அளிக்கவோ வசதி செய்யப்பட்டுள்ளது.

தங்கள் பெயரிலுள்ள சிம் அட்டைகளை மற்றவர்களுக்கு விற்பதோ அல்லது வாடகைக்கு விடுவதோ சட்டப்படி குற்றம் என இந்திய அரசு தெளிவுபடுத்தி உள்ளது.

குறிப்புச் சொற்கள்