எங்கிருந்தோ வந்த பணத்தால் வங்கி வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி

எங்கிருந்தோ வந்த பணத்தால் வங்கி வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி

1 mins read
21c73e75-e842-43c9-a727-18125e8b3a33
தங்களது கணக்குகளில் போடப்பட்ட பணத்தை எடுக்கத் திரண்ட வாடிக்கையாளர்கள். - படம்: இந்திய ஊடகம்

புவனேஸ்வர்: அதிர்ஷ்டம் கூரையைப் பிய்த்துக்கொண்டு கொட்டும் என்று சொல்வார்கள்.

அப்படி ஒரு சம்பவம் இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில் நிகழ்ந்துள்ளது.

ஒடிசா மாநிலத்தில் 549 கிளைகளுடன் கிட்டத்தட்ட 5.5 மில்லியன் வாடிக்கையாளர்களுடன் செயல்பட்டு வருகிறது ஒடிசா கிராமிய வங்கி.

அங்குள்ள கேந்திரபாரா நகரில் இருக்கும் அவ்வங்கிக் கிளையின் வாடிக்கையாளர்கள் பலரது கணக்குகளில் திடீரெனப் பணம் வரவு வைக்கப்பட்டது. அக்கணக்குகளில் பணத்தை யார் போட்டார்கள் என்ற விவரம் எதுவும் தெரியவில்லை.

ஆயினும், தங்களது கணக்குகளில் பணம் வரவு வைக்கப்பட்டதை அறிந்த வாடிக்கையாளர்கள், வெள்ளிக்கிழமை காலை அவ்வங்கி திறந்ததும் பணத்தை எடுக்க விரைந்ததால் அங்கு நீண்ட வரிசை காணப்பட்டது.

இதனால் திகைப்படைந்த அவ்வங்கிக் கிளையின் மேலாளர், 300 கணக்குகளைச் சோதித்துப் பார்த்ததாகக் கூறினார்.

“பணம் எங்கிருந்து வந்தது என்பதைக் கண்டறிய முயன்று வருகிறோம். வாடிக்கையாளர்களின் கணக்குகளில் யார், எதற்காகப் பணம் போட்டனர் என்பது தெரியவில்லை. ஆனாலும், வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சியாகப் பணத்தை எடுத்துச் செல்கின்றனர்,” என்று அவர் விளக்கினார்.

ஒவ்வொருவர் கணக்கிலும் ரூ.30,000லிருந்து ரூ.2 லட்சம் வரை போடப்பட்டிருந்ததாக அவர் குறிப்பிட்டார்.

இப்படி நாற்பதுக்கும் மேற்பட்ட கணக்குகளில் பணம் போடப்பட்டிருந்ததாக ஒடிசா ஊடகச் செய்தி தெரிவித்துள்ளது.

குறிப்புச் சொற்கள்