புவனேஸ்வர்: ஒடிசாவில் குடும்பத் தகராறு காரணமாகப் பெற்றோர் தற்கொலை செய்து கொண்ட நிலையில், இறந்த தந்தை, மயக்கமடைந்த தாயுடன் 5 வயது சிறுவன் இரவு முழுவதும் கடும் குளிரில் காட்டுக்குள் தவித்த சம்பவம் காண்போரைக் கண்ணீரில் ஆழ்த்தியுள்ளது.
ஒடிசா மாநிலம் தியோகர் மாவட்டம், ஜியானந்தபலி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் துஷ்மந்த் மஜ்ஹி, ரிங்கி மஜ்ஹி. இத்தம்பதிக்கு 5 வயதில் ஒரு மகன் உள்ளான்.
கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட குடும்பத் தகராறு காரணமாக, இருவரும் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது விபரீத முடிவை எடுத்துள்ளனர்.
வாகனத்தைச் சாலையோரம் நிறுத்திவிட்டு, வனப்பகுதிக்குள் சுமார் ஒரு கிலோமீட்டர் தூரம் சென்று இருவரும் பூச்சிக்கொல்லி மருந்தை குடித்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
விஷம் குடித்த சிறிது நேரத்திலேயே தந்தை துஷ்மந்த் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தாய் ரிங்கி மயக்கமடைந்தார்.
என்ன நடக்கிறது என்று தெரியாத அந்த 5 வயது சிறுவன், அசைவற்றுக் கிடந்த பெற்றோருடன் இரவு முழுவதும் அந்த அடர்ந்த காட்டுப் பகுதியிலும் கடும் குளிரிலும் தனியாக இருந்துள்ளான்.
விடிந்த பிறகு, ஞாயிற்றுக்கிழமை காலை காட்டுப் பகுதியிலிருந்து வெளியேறிய சிறுவன், சாலையில் சென்ற வழிப்போக்கர்களிடம் அழுதுகொண்டே உதவி கேட்டுள்ளான்.
அதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த மக்கள் காவல்துறைக்குத் தகவல் கொடுத்தனர். மயங்கிய நிலையில் மீட்கப்பட்ட தாய் ரிங்கி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார், ஆனால், அவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
தொடர்புடைய செய்திகள்
இது குறித்து தியோகர் காவல் அதிகாரி தீரஜ் கூறுகையில், “பெற்றோர் அந்தச் சிறுவனுக்கும் பூச்சிக்கொல்லி மருந்தைக் கொடுத்ததாகத் தெரிகிறது. ஆனால், அதிர்ஷ்டவசமாகச் சிறுவன் அதிலிருந்து உயிர் பிழைத்துவிட்டான். தற்போது அவன் நல்ல ஆரோக்கியத்துடன் உள்ளான். முதலுதவி சிகிச்சைக்குப் பிறகு சிறுவன் அவனது தாத்தா, பாட்டியிடம் ஒப்படைக்கப்பட்டான்,” என்று தெரிவித்தார்.
பெற்றோரை இழந்து வாடும் சிறுவனின் நிலை, அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்துத் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

