கோல்கத்தா: வங்கக் கடலில் நிலைகொண்டிருந்த ‘டாணா’ சூறாவளி வெள்ளிக்கிழமை அதிகாலை (அக்டோபர் 25) கரையைக் கடந்தது.
வியாழக்கிழமை (அக்டோபர் 24) இரவு முதல் வெள்ளிக்கிழமை காலை வரை மணிக்கு 120 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளி வீசியது.
இந்தச் சூறாவளி கரையைக் கடந்து செல்ல கிட்டத்தட்ட 6 மணி நேரம் எடுத்துக்கொண்டது. அதனால் ஒடிசா, மேற்குவங்க மாநிலங்களில் கடும் காற்றுடன் கனமழை பெய்தது.
சூறாவளி ஓய்ந்தபிறகும் ஒடிசாவின் சில மாவட்டங்களில் கனமழை தொடர்ந்தது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்
‘டாணா’ சூறாவளியால் ஒடிசாவின் கடலோர மாவட்டங்கள் கடுமையாகப் பாதிக்கப்படலாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து 1 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டனர்.
இந்நிலையில், சூறாவளிக்குப் பிந்தைய மீட்பு, நிவாரணப் பணிகள் குறித்து ஒடிசா அரசு, உயர் அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தியது.
சேத விவரங்கள் குறித்தும் மீட்பு, நிவாரணப் பணிகள் குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டது.
“சூறாவளியால் உயிரிழப்புகள் ஏற்பட்டதாக தகவல் இல்லை. பல இடங்களில் மரங்கள் சரிந்து விழுந்துள்ளதால், பெரிய அளவில் மின்கம்பங்கள் சேதமடைந்துள்ளன. சாலைகளில் உள்ள தடைகள் அகற்றப்பட்டு வருகின்றன. தேசிய மீட்புப் படையினர் தங்களின் மீட்புப் பணிகளைத் தொடங்கியுள்ளனர்,” என்று ஒடிசா அரசாங்கத்தின் பேச்சாளர் தெரிவித்தார்.
தொடர்புடைய செய்திகள்
மேற்கு வங்கத்திலும் மழை
‘டாணா’ சூறாவளி காரணமாக மேற்கு வங்கத்தில் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. கடற்கரைப் பகுதிகளில் கடல் சீற்றம் அதிகமாக இருந்தது.
ஹவுராவில் உள்ள மாநில அவசரகாலக் கட்டுப்பாட்டு கட்டுப்பாட்டு மையத்துக்கு வந்திருந்த அம்மாநில முதல்வர் மம்தா, புயலின் நகர்வுகளைக் கவனித்து அதிகாரிகளுக்குத் தேவையான உத்தரவுகளைப் பிறப்பித்தார்.
கோல்கத்தா மாநகராட்சி சாலைகளில் முறிந்து விழுந்த மரங்களை அப்புறப்படுத்துதல், தேங்கியுள்ள நீரை வெளியேற்றுதல் போன்ற பணிகள் வெள்ளிக்கிழமையன்று முடுக்கிவிடப்பட்டன.
சூறாவளி ஓய்ந்ததால் ஒடிசாவின் பிஜு பட்நாயக் விமான நிலையத்தில் காலை 8 மணி முதல் விமானப் போக்குவரத்து சேவை தொடங்கியது. மேற்குவங்க மாநிலத்தின் கோல்கத்தா விமான நிலையத்திலும் போக்குவரத்து வழக்கநிலைக்குத் திரும்பியது.