மும்பை: மும்பை உயர்நீதிமன்றத்தின் அமர்வு, சிறுவயது மனைவியுடன் உடலுறவு கொண்டால் சட்டப்படி குற்றம் என்று தெரிவித்துள்ளது.
சிறுவயது மனைவியை பாலியல் பலாத்காரம் செய்த கணவருக்கு கீழ் நீதிமன்றம் விதித்த 10 ஆண்டு சிறைத் தண்டனையை மும்பை நீதிமன்றம் உறுதி செய்து தீர்ப்பளித்தது.
“வயது வராத மனைவியிடம் அவரது ஒப்புதல் இருந்தாலும் பாலியல் உறவில் ஈடுபட்டால் அது சட்டப்படி குற்றம். சட்டத்தின்கீழ் இதுபோன்ற செயல்களை ஏற்றுக் கொள்ள முடியாது. சிறுவயது மனைவியிடம் உடலுறவு கொண்டால் பாலியல் வன்முறையாகக் கருதப்படும்,” என்று உயர் நீதிமன்றம் கூறியது.
தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக கணவர் மீது மனைவி வழக்குத் தொடுத்திருந்தார். இந்த வழக்கில் அவரது கணவருக்கு கீழ்நீதிமன்றம் பத்து ஆண்டுகாலம் சிறைத் தண்டனை விதித்தது.
இந்தத் தண்டனையை மும்பை உயர்நீதிமன்ற நாக்பூர் அமர்வும் உறுதி செய்து உத்தரவிட்டது.
“பதினெட்டு வயதுக்கு மேற்பட்ட பெண்ணின் ஒப்புதலே ஏற்றுக் கொள்ளப்படும்,” என்று நீதிபதி ஜிஏ சானப் கூறினார்.
“பதினெட்டு வயதுக்குக்கீழ் உள்ள பெண்ணிடம் பாலியல் உறவு கொண்டால் திருமணமானாலும் ஆகாவிட்டாலும் பாலியல் பலாத்காரமாகக் கருதப்படும்,” என்றார் அவர்.
இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட பெண், மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள வார்தாவில் தமது தந்தை, சகோதரிகள், பாட்டியுடன் வசித்து வந்தார். நிதிப் பிரச்சினையில் இருந்த பெண்ணுக்கு வேலைக்குச் சென்று வர ஆடவர் ஒருவர் உதவியிருக்கிறார். ஒரு கட்டத்தில் அந்தப் பெண்ணை ஒரு பாலியல் உறவுக்கு ஆடவர் வற்புறுத்தினார், இதில் பெண் கர்ப்பமடைந்தார்.
தொடர்புடைய செய்திகள்
ஆரம்பத்தில், குற்றம் சாட்டப்பட்ட ஆடவர், பெண்ணைத் திருமணம் செய்து கொள்வதாக உறுதியளித்தார். ஒரு வாடகை அறையில் சில அண்டை வீட்டார் முன்னிலையில் அவர் பெண்ணைத் திருமணம் செய்துகொண்டார்.
ஆனால் ஆடவரின் நடத்தை நாளுக்கு நாள் மோசமானது. கருவை கலைக்க வேண்டும் என கட்டாயப்படுத்தினார். வேறொரு ஆணுடன் குழந்தை பெற்றதாகவும் ஆடவர் குற்றம் சாட்டினார்.
இதனை தாள முடியாத பெண் 2019ல் காவல்துறையில் கணவருக்கு எதிராக புகார் அளித்தார். இதையடுத்து கணவர் கைது செய்யப்பட்டு அவர் மீது வழக்குத் தொடுக்கப்பட்டது.

