மீரட்: செய்தியாளர் சந்திப்பின்போது பாஜக சட்டமன்ற உறுப்பினருக்குத் திரும்ப திரும்பத் தேநீர் வழங்க மறுத்ததால் ஊராட்சி உதவி மேம்பாட்டு அலுவலர் ஒருவர் பணியிடமாற்றம் செய்யப்பட்டார்.
அவரைப் பணியிடைநீக்கம் செய்யும் நடைமுறைகளும் இடம்பெற்று வருவதாக இந்திய ஊடகச் செய்தி தெரிவிக்கிறது.
அந்த 58 வயது அலுவலர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்.
இச்சம்பவம் இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தில் கடந்த வியாழக்கிழமை (மார்ச் 27) நடந்தது.
“எங்களுக்கெல்லாம் தேநீர் ஏற்பாடு செய்யும்படி அந்த உதவி அலுவலரைக் கேட்டுக்கொண்டோம். நாங்கள் திரும்ப திரும்பத் தேநீர் கேட்பதாகக் கூறி, அவர் கோபமடைந்தார். ‘நான் ஒன்றும் உங்கள் பணியாள் அல்லன்’ என்றும் அவர் சொன்னார்,” என்று ஹாப்பூர் தொகுதி எம்எல்ஏ விஜய் பால் விளக்கினார்.
அதனைத் தொடர்ந்து, பிஷன் சக்சேனா என்ற அந்த அலுவலர்மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும்படி மாவட்ட நீதிபதி பிரேர்னா சர்மாவிடம் விஜய் பால் கேட்டுக்கொண்டார்.
“சற்று நேரத்திற்கு முன்புதான் எம்எல்ஏவுக்குத் தேநீர் கொடுத்தேன். அதிபரானாலும் பிரதமரானாலும் ஓயாமல் தேநீர் வழங்கமாட்டேன்,” என்று சக்சேனா விளக்கமளித்தார்.
எம்எல்ஏ எழுத்துவழி புகார் அளித்ததால் சக்சேனாமீது நடவடிக்கை எடுக்கப்பட்டதாகத் தலைமை மேம்பாட்டு அலுவலர் கௌதம் தெரிவித்தார்.
தொடர்புடைய செய்திகள்
“வயதில் மூத்தவர் என்பதால் தான் தேநீர் வழங்கும்படி எதிர்பார்க்கக்கூடாது என்று சக்சேனா மறுத்துள்ளார். அவர் புற்றுநோயை எதிர்த்துப் போராடி வருகிறார்; உயிர்காக்கும் மருந்துகளை உட்கொண்டு வருகிறார். அவருக்கு அதிகமாகக் கோபம் வரும் என்று சக ஊழியர்கள் தெரிவித்தனர். ஆனாலும், பணியிடத்தில் இத்தகைய நடத்தையைச் சகித்துக்கொள்ள முடியாது,” என்று கௌதம் கூறினார்.

