ராணுவத்திற்கு டிரோன் வாங்கியதில் ரூ.10 லட்சம் லஞ்சம் வாங்கிய அதிகாரிகள் கைது

2 mins read
8d984700-dd29-4092-a5f9-fdb9673e5aac
மூத்த கணக்குத் தணிக்கையாளர் தீப் நாராயன் யாதவ் உள்ளிட்ட மூன்று அதிகாரிகளை மத்திய புலனாய்வுத்துறை கைது செய்துள்ளது. - படம்: ஊடகம்

புதுடெல்லி: இந்திய ராணுவத்திற்கு டிரோன் வழங்கிய நிறுவனத்திடம் ரூ.10 லட்சம் கேட்டதாகப் பாதுகாப்புத்துறை அதிகாரி உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த 2023ஆம் ஆண்டு செப்டம்பர் 29ஆம் தேதி ராப் எம்பையர் நிறுவனம், இந்திய ராணுவத்திற்கு டிரோன்களை விற்பனை செய்தது. அதற்காக ரூ.55.96 கோடி மதிப்பிலான விலைப்பட்டியலை அந்நிறுவனம் வழங்கியது.

அந்தத் தொகையை ராணுவத்தின் சார்பில் கணக்குகள் பிரிவின் முதன்மைக் கட்டுப்பாளர் அலுவலகம் ராப் நிறுவனத்திற்கு வழங்கியது.

அதன்பின், தங்களுக்கு ரூ.10 லட்சம் லஞ்சமாகத் தர வேண்டும் என்று, மூத்த கணக்குத் தணிக்கையாளர் தீப் நாராயன் யாதவ் உள்ளிட்ட மூன்று அதிகாரிகள் அந்த நிறுவனத்திடம் கேட்டுள்ளனர்.

அவ்வாறு தரவில்லையெனில், வரும் காலங்களில் டிரோன்களை விற்பனை செய்தால் அதற்கான பணத்தை வழங்க முட்டுக்கட்டை போடுவோம் என்றும் மிரட்டி உள்ளனர்.

அதையடுத்து, ராப் எம்பையர் நிறுவனத்தின் நிதித்துறை துணைத் தலைவர் வருண் நரங், சிபிஐ அலுவலகத்தில் பிப்ரவரி 7ஆம் தேதி புகார் செய்துள்ளார்.

இது தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதன் பிறகு, மத்திய புலனாய்வுத்துறை அதிகாரிகளின் வழிகாட்டுதலின் பேரில் ராப் நிறுவனத்தினர் முதல்கட்டமாக ரூ.8 லட்சத்தை பிசிடிஏ அதிகாரி ஒருவரிடம் வழங்கி உள்ளனர்.

அப்போது, நடந்த உரையாடல் பதிவுசெய்யப்பட்டது. அந்த உரையாடலின் அடிப்படையில், புலனாய்வுத்துறை அதிகாரிகள் லஞ்சம் வாங்கிய அதிகாரியைக் கைது செய்தனர்.

பின்னர் தீப் நாராயண் யாதவ் மற்றும் ஆகாஷ் பாலிடெக்னிக் நிறுவன உரிமையாளர் ஆகாஷ் கபூர் ஆகியோரையும் அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

குறிப்புச் சொற்கள்