மும்பை: ஐபோனுக்குப் பதிலாக எண்ணெய்ப் புட்டியை விநியோகித்த விவகாரத்தில் வாடிக்கையாளர்க்கு ரூ.180,000 இழப்பீடு வழங்கும்படி பயனீட்டாளர் குறைதீர்ப்பு ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
மும்பை பொவாய் பகுதியைச் சேர்ந்த வாடிக்கையாளர் ஒருவர், இணையத்தளத்தில் ஐபோன் ஒன்றைப் பதிவுசெய்தார். வட்டியில்லா மாதத் தவணை முறையில் ரூ.111,793 ரூபாய் செலுத்தி, அவர் ‘ஆப்பிள் ஐபோன் 14 புரோ’ கைப்பேசியை வாங்கியிருந்தார்.
ஆனால், அவருக்கு அனுப்பி வைக்கப்பட்ட பொட்டலத்தில் கைப்பேசிக்குப் பதிலாகத் தாடி வளர்க்கும் எண்ணெய் மட்டுமே இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், இணையத்தளத்தின் வாடிக்கையாளர் சேவைப் பிரிவைத் தொடர்புகொண்டு உடனடியாகப் புகார் அளித்தார்.
எனினும், அந்நிறுவனம் பல வாரங்களாகப் புகாரைத் தீர்க்காமல் அலட்சியப் போக்கோடு நடந்துகொண்டதாகக் கூறப்படுகிறது. எந்தவித இழப்பீடும் வழங்காமல், அக்கோரிக்கையை ‘தீர்க்கப்பட்டதாகக் கூறி’ நிறுவனம் மூடிவிட்டதாக வாடிக்கையாளர் குற்றஞ்சாட்டினார்.
இதனால் மனவுளைச்சலுக்கு ஆளான வாடிக்கையாளர், மும்பை கூடுதல் பயனீட்டாளர் குறைதீர்ப்பு ஆணையத்தில் வழக்கு தொடுத்தார். ஃபிளிப்கார்ட் மற்றும் அதன் விற்பனையாளர் நிறுவனத்துக்கு எதிராக அந்த வழக்கு பதிவு செய்யப்பட்டது.
வழக்கை விசாரித்த ஆணையம், சேவைக் குறைபாட்டையும் நேர்மையற்ற வணிக முறையையும் சுட்டி, கடுமையாகச் சாடியது.
மேலும், வாடிக்கையாளர் செலுத்திய அசல் தொகையை 9 விழுக்காட்டு வட்டியுடன் திருப்பித் தருமாறு உத்தரவிடப்பட்டது. மனவுளைச்சல், வழக்குச் செலவு உட்பட மொத்தம் ரூ.1.8 லட்சம் இழப்பீடு வழங்க ஆணையம் உத்தரவிட்டது.

