மும்பை: இந்தியாவின் ஆகப் பெரிய மின்ஸ்கூட்டர் தயாரிப்பு நிறுவனமான ‘ஓலா எலெக்ட்ரிக் மொபிலிட்டி’ ஒரே நாளில் 3,200 புதிய கிளைகளைத் திறந்துள்ளது.
இதன்மூலம் இந்தியாவில் ஓலா நிறுவனத்தின் விற்பனை, சேவை மையங்களின் எண்ணிக்கை 4,000ஆக அதிகரித்துள்ளது என்று அக்குழுமத்தின் நிதிச் சேவைகள், சில்லறை வணிகப் பிரிவுத் தலைவர் அங்குஷ் அகர்வால் புதன்கிழமை (டிசம்பர் 25) தெரிவித்தார்.
சிறு நகரங்களிலும் கால் பதிக்க விரும்பும் ஓலா நிறுவனம், விற்பனைக்குப் பிந்திய தனது சேவைகளையும் வலுப்படுத்த முனைகிறது.
ஒவ்வோர் இந்திய நகரிலும், மாநகரிலும், மாவட்டத்திலும் ஓலா விற்பனை, சேவை நிலையம் இருக்கும் என்று அந்நிறுவனத்தின் இணை நிறுவனரும் தலைவருமான பவிஷ் அகர்வால் அண்மையில் எக்ஸ் ஊடகம் வழியாகத் தெரிவித்திருந்தார்.
அண்மைக்காலமாக, ஓலா மின்ஸ்கூட்டரின் சேவை, செயல்பாடு தொடர்பில் ஓலா விற்பனை, சேவை நிலையங்களுக்கு வாடிக்கையாளர்களிடமிருந்து ஏராளமான புகார்கள் வந்தன. சராசரியாக மாதந்தோறும் அத்தகைய 80,000 புகார்கள் வந்ததாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்தன.
ஓலா மின்ஸ்கூட்டரின் பிறழ்செயல்பாடு தொடர்பில் பல காணொளிகளும் புகைப்படங்களும் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டன. இந்திய நகைச்சுவையாளர் ஒருவர் ஓலா மின்ஸ்கூட்டரைப் பற்றி விமர்சித்திருந்ததால் திரு அகர்வால் அவருடன் சமூக ஊடகம் வழியாக வாக்குவாதத்தில் ஈடுபட்டது நினைவுகூரத்தக்கது.
இத்தகைய சூழலில், சந்தையில் தனது பங்கை உயர்த்தும் நோக்கத்துடன் ஓலா நிறுவனம் அதிக எண்ணிக்கையில் புதிய கிளைகளைத் திறந்துள்ளதாகப் பார்க்கப்படுகிறது.