புதுடெல்லி: இந்தியாவில் இயங்கிவரும் முதியோர் இல்லங்கள், முதியோர்களுக்காக வழங்கப்பட்டுள்ள உள்கட்டமைப்பு வசதிகள் குறித்த தற்போதைய நிலவர அறிக்கையைத் தாக்கல் செய்யுமாறு அனைத்து மாநிலங்களுக்கும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வறுமைக் கோட்டிற்கும்கீழ் வாழும் முதியோர்களின் வாழ்வாதாரம், உணவு, மருத்துவப் பாதுகாப்பு, தங்குமிடம் ஆகியவற்றை உறுதிசெய்ய வலியுறுத்தி, முன்னாள் மத்திய அமைச்சர் அஸ்வினி குமார் தொடர்ந்த பொதுநல மனுவை உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி சூர்யா காந்த் தலைமையிலான அமர்வு விசாரித்தது.
நாடு முழுவதும் மூத்த குடிமக்கள், முதியோரின் அடிப்படை உரிமைகள், நலன்கள் தொடர்ந்து புறக்கணிக்கப்படுகின்றன என்றும் அனைத்து மாவட்டங்களிலும் முதியோர் இல்லங்கள் அமைத்து அவர்களுக்கான ஓய்வூதியம், மருத்துவப் பராமரிப்பு வசதிகளை உறுதி செய்ய வேண்டும் என்றும் திரு அஸ்வினி குமார் தனது மனுவில் தெரிவித்திருந்தார்.
மனு மீதான விசாரணையின்போது தலைமை நீதிபதி அமர்வு, சில முக்கியமான உத்தரவுகளைப் பிறப்பித்தது.
முதியோர் இல்லங்களின் எண்ணிக்கை, அங்குள்ள வசதிகள் குறித்த விரிவான நிலவர அறிக்கையை நான்கு வாரங்களுக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்று அந்த அமர்வு உத்தரவிட்டது.
மாநிலங்களின் அறிக்கையைப் பெற்ற பிறகே வழக்கு கண்காணிப்பு முறை குறித்து முடிவெடுக்கப்படும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
முன்னதாக, வழக்கை உயர் நீதிமன்றங்களின் கண்காணிப்பிற்கு மாற்ற மத்திய அரசு தரப்பில் கோரப்பட்ட போதிலும், நாடு தழுவிய இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றமே தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என மனுதாரர் வாதிட்டார்.


