புதுடெல்லி: உலகில் முதல் முறையாக வாராந்தர இன்சுலின் ஊசியை, ‘அவிக்லி’ என்ற பெயரில் நோவோ நார்டிஸ்க் நிறுவனம் இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.
முதலாம் வகை நீரிழிவு நோய் அல்லது தீவிரமான இரண்டாம் வகை நீரிழிவு நோய் உள்ள நோயாளிகள், தங்களின் ரத்த சர்க்கரை அளவை ஆரோக்கியமான வரம்புக்குள் வைத்திருக்க, நாள் ஒன்றுக்கு ஒரு முறையோ பல முறையோ இன்சுலின் செலுத்த வேண்டியுள்ளது.
டென்மார்க் நாட்டைச் சேர்ந்த நோவோ நார்டிஸ்க் என்ற மருந்து நிறுவனம், நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட பெரியோர்க்கான உலகின் முதல் வாரத்துக்கு ஒரு முறை செலுத்தும் இன்சுலின் ‘அவிக்லி’யை ஜூலை 9ஆம் தேதி அறிமுகப்படுத்தியது.
இந்த எளிமையான முறை, சிகிச்சையைத் தவறாமல் தொடர உதவுவதோடு, ஊசிக்கு பயந்து சிகிச்சையைத் தொடங்கத் தயங்கும் நோயாளிகளை விரைவாக இன்சுலின் எடுத்துக்கொள்ள ஊக்குவிக்கும்.
இந்தியாவில் கிட்டத்தட்ட 10.1 கோடி பேர் நீரிழிவு நோயுடனும் 13.6 கோடி பேர் ஆரம்பகட்ட நீரிழிவு நிலையிலும் இருக்கின்றனர்.
மேலும், அந்நாட்டில் 9 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் முதலாம் வகை நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், அதன் சிகிச்சை பெரும்பாலும் இன்சுலின் முறையைச் சுற்றியே அமைகிறது.
வாரத்திற்கு ஒரு முறை பேனா வடிவிலான கருவி மூலம் ‘அவிக்லி’ செலுத்தப்பட வேண்டும்.
இந்தியாவில் அதன் விலை ரூ.261 (S$3.53).
உலகின் மிக அதிகமான நீரிழிவு நோய் பாதிப்பு கொண்ட நாடுகளில் ஒன்றாக இந்தியா விளங்குவதால் இந்த அறிமுகம் முக்கியத்துவம் பெறுகிறது.
இந்தியச் சோதனை நிலையங்களில் ஒன்றை வழிநடத்திய ‘கேஇஎம்’ மருத்துவமனையின் டாக்டர் துஷார் பந்கர், “இயற்கையாகவே உடலில் ஓரளவு இன்சுலின் உற்பத்தியாகி, அடிப்படை இன்சுலின் மாற்று மட்டும் தேவைப்படும் நோயாளிகளுக்கு இந்தச் சிகிச்சை மிகவும் பொருத்தமானதாக இருக்கும்,” எனக் கூறினார்.
மேலும், ஒவ்வொரு நாளும் பலமுறை இன்சுலின் ஊசி செலுத்திக்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருப்பவர்களுக்கு இந்த ஊசியால் எதிர்பார்த்த அளவுக்குப் பலன் கிடைக்காமல் போகலாம் என்றும் டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழிடம் அவர் தெரிவித்தார்.
உடல் எடையைக் குறைக்கும் புதிய மருந்துகளின் பயன்பாடும் ‘ஜிஎல்பி-1 ரிசப்டர் அகோனிஸ்ட்ஸ்’ போன்ற இன்சுலின் சுரப்பதற்கு வழங்கப்படும் மருந்துகளின் அதிகரித்துவரும் பயன்பாடும் ஏற்கெனவே பல நோயாளிகளுக்கு இன்சுலின் தேவையைக் குறைத்து வருவதாக டாக்டர் துஷார் மேலும் குறிப்பிட்டார்.

