புதுடெல்லி: இந்தியா முழுவதும் பரவலாக எதிர்பார்க்கப்படும் ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதா இம்மாதம் 16ஆம் தேதி திங்கட்கிழமை தாக்கல் செய்யப்படுகிறது.
இந்த மசோதாவுக்கு எதிர்க்கட்சிகள் பலத்த எதிர்ப்பு தெரிவித்தாலும் பாஜக தலைமையிலான ஆளும் மத்திய அரசு அதனை நிறைவேற்ற தீர்மானமாக உள்ளது.
இந்த நிலையில் ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ மசோதா டிசம்பர் 16ஆம் தேதி மக்களவையில் மத்திய சட்டத் துறை அமைச்சர் அர்ஜுன்ராம் மேக்வால் தாக்கல் செய்வார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியா முழுவதும் மக்களவையின் 543 தொகுதிகள், மாநிலங்களின் 4,120 சட்டமன்றத் தொகுதிகள், முப்பது லட்சத்துக்கும் மேற்பட்ட உள்ளாட்சிப் பதவிகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த மத்திய அரசு விரும்புகிறது.
இந்தத் திட்டத்தை ஆய்வு செய்ய முன்னாள் அதிபர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் கடந்த ஆண்டு செப்டம்பரில் உயர்நிலைக் குழு ஒன்று அமைக்கப்பட்டது.
இதில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, காங்கிரஸ் மூத்த தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, மாநிலங்களவை முன்னாள் தலைவர் குலாம் நபி ஆசாத், நிதி ஆணைய முன்னாள் தலைவர் என்.கே.சிங், மக்களவை முன்னாள் செயலர் சுபாஷ் கே காஷ்யப், மூத்த வழக்கறிஞர் ஹரிஷ் சால்வே, முன்னாள் ஊழல் கண்காணிப்பு ஆணையர் சஞ்சய் கோத்தாரி ஆகியோர் உறுப்பினர்களாக இருந்தனர்.
இதையடுத்து ராம்நாத் கோவிந்த் குழு பல்வேறு ஆய்வுகளை நடத்தி கடந்த மார்ச் மாதம் அதிபர் திரௌபதி முர்முவிடம் 18,000 பக்கங்கள் கொண்ட அறிக்கையை வழங்கியது.
அதில், மக்களவை, மாநிலங்களின் சட்டமன்றங்களுக்கு ஒரே கட்டமாக தேர்தல் நடத்த வேண்டும் என்றும் இந்தத் தேர்தலுக்கு பிறகு அடுத்த 100 நாட்களில் நாடு முழுவதும் ஒரே கட்டமாக உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும் என்றும் ஒரே வாக்காளர் பட்டியலை தயாரிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
தொடர்புடைய செய்திகள்
மத்திய அரசு, குழுவின் பரிந்துரைகளை கடந்த செப்டம்பரில் ஏற்றுக் கொண்டது.
ஆனால் எதிர்க்கட்சிகள் இந்த மசோதாவை எதிர்க்கின்றன.
காங்கிரஸ் மூத்த தலைவரும் மாநிலங்களவை எம்.பி.யுமான திக்விஜய் சிங். “ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற முறையின் கீழ் தேர்தல் நடத்தப்பட்டு அதில் ஒரு மாநில அரசு ஆறு மாதங்களில் கவிழ்ந்துவிட்டதால் தேர்தல் விதிமுறையின்படி 6 மாதங்களுக்குள் தேர்தல் நடத்த வேண்டும். அப்போது, ஒரே நாடு ஒரே தேர்தல் நடைமுறை அமலுக்கு வந்துவிட்டால், அடுத்த 4.5 ஆண்டுகள் அந்த மாநிலம் அரசாங்கமே இல்லாமல் இருக்க வேண்டுமா என்று கேள்வி எழுப்பியிருக்கிறார்.
மற்றொரு மூத்த காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ், “இந்த சட்ட மசோதாவை நாடாளுமன்ற கூட்டுக்குழுவின் பரிசீலனைக்கு அனுப்ப வேண்டும். இது ஜனநாயக விரோதச் செயல்” என்று குறிப்பிட்டுள்ளார்.
தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினும் ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவை முழு பலத்துடன் எதிர்போம் என்று சூளுரைத்துள்ளார்.
“இது நடைமுறைக்கு மாறான ஜனநாயக விரோத நடவடிக்கை. மாநிலங்களின் குரல்களை அழித்து, கூட்டாட்சித் தன்மையை சிதைத்து, ஆட்சியை சீர்குலைக்கும்.” என்று திரு ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.