ஒரே நாடு, ஒரே தேர்தல்: மத்திய அரசு தீவிரம்

2 mins read
e8b993fb-6eeb-4a01-acd0-e9f19ed3af95
மோடியின் மூன்றாவது தவணை ஆட்சிக் காலம் 100 நாள்களை நிறைவு செய்துள்ளது. - கோப்புப் படம்: இந்திய ஊடகம்

புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான தற்போதைய மூன்றாவது தவணை ஆட்சிக் காலத்திலேயே ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ திட்டத்தை அமல்படுத்த மத்திய அரசு தீவிரமாக உள்ளதாக அரசுத் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மக்களவைத் தேர்தல் முடிந்து பிரதமர் மோடி தலைமையில் மூன்றாவது முறையாக ஆட்சி அமைந்து, 100 நாள்களை எட்டியுள்ளது.

இந்த ஆட்சிக் காலத்தில் மேற்கொள்ள வேண்டிய திட்டங்கள் தொடர்பாக இந்த 100 நாள்களில் ஒவ்வொரு துறையும் ஆலோசனை நடத்தி, தங்களுடைய பரிந்துரைகளை அளித்துள்ளன.

நாடாளுமன்ற, சட்டமன்ற மற்றும் மாநகராட்சிகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ நடைமுறையை அமல்படுத்துவது தொடர்பாக, முன்னாள் அதிபர் ராம்நாத் கோவிந்த் தலைமையிலான குழு தனது பரிந்துரைகளை முன்வைத்து உள்ளது.

புதிய திட்டத்தை, மோடியின் நடப்பு ஆட்சிகாலத்துக்குள் அமல்படுத்த மத்திய அரசு மிகவும் தீவிரமாக உள்ளது.

தேர்தல் பிரசாரத்தின்போதும் அண்மையில் சுதந்திர தின விழாவில் பேசியபோதும் பிரதமர் மோடி இதனை வலியுறுத்தினார்.

இது தொடர்பாக, சட்ட ஆணையம் தனது பரிந்துரைகளை விரைவில் அளிக்க உள்ளது. அதைத் தொடர்ந்து, திட்டத்தை அமல்படுத்துவதற்கான சட்டபூர்வ நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

இந்த ஆட்சி காலத்துக்குள் ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை அறிமுகம் செய்து, 2029 தேர்தலில் நடப்புக்குக் கொண்டு வர மத்திய அரசு தீவிரமாக உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

கொவிட்-19 பெருந்தொற்று பரவல் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பை மீண்டும் தொடங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாகவும் அரசுத்தரப்பு தகவல்கள் கூறின.

குறிப்புச் சொற்கள்