புதுடெல்லி: ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ திட்டம் தொடர்பான உயர்நிலைக் குழுவின் பரிந்துரைகளை மத்திய அமைச்சரவை புதன்கிழமை (18 செப்டம்பர் ) ஏற்றது.
இந்தத் திட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்த நிலையில், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையான எதிர்ப்புகளைத் தெரிவித்து வருவதாக இந்திய ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ திட்டம் நடைமுறையில் சாத்தியமே இல்லை என்று எதிர்க்கட்சிகள் கூறுகின்றன.
திட்டத்தின் பின்னணி
‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ திட்டத்தின்படி தேர்தல் நடத்துவது குறித்து முன்னாள் குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் தலைமையில் உயர்நிலைக் குழு அமைக்கப்பட்டது.
அந்த உயர்நிலைக் குழு, அரசியல் கட்சிகள், நிபுணர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினருடன் விரிவாக ஆலோசனை நடத்தி மத்திய அமைச்சிடம் பரிந்துரைகளை சமர்ப்பித்தது.
நாட்டில் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதற்கு பரவலான ஆதரவு இருப்பதாக உயர்நிலைக் குழு தெரிவித்தது.
திட்டம் இரண்டு கட்டங்களாக செயல்படுத்தப்பட வேண்டும். முதல் கட்டமாக மக்களவை மற்றும் சட்டப்பேரவைத் தேர்தலை ஒரே நேரத்தில் நடத்த வேண்டும்.
இரண்டாம் கட்டமாக, பொதுத் தேர்தல் நடந்த 100 நாட்களுக்குள் உள்ளாட்சித் தேர்தலை (பஞ்சாயத்து மற்றும் நகராட்சிகள்) நடத்த வேண்டும். அனைத்து தேர்தல்களுக்கும் பொதுவான வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்பட வேண்டும்.
தொடர்புடைய செய்திகள்
மேலும், தேர்தல் செலவு குறையும், ஆளும் கட்சிகள் தேர்தல் நேரப் பணிகளைக் குறைத்து, நலத் திட்டங்களில் கவனம் செலுத்த முடியும், வாக்குப்பதிவு அதிகரிக்கும், வேட்பாளர்கள் கறுப்புப் பணத்தையும் ஊழல் பணத்தையும் தேர்தலுக்குப் பயன்படுத்துவதைக் கட்டுப்படுத்த முடியும் என கூறப்படுகிறது.
‘நடைமுறைக்கு ஏற்றதல்ல’
திட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்த நிலையில் காங்கிரஸ், திமுக, ராஷ்ட்ரிய ஜனதா தளம் உள்ளிட்ட 15 கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
‘ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டம்’ நடைமுறைக்கு ஏற்றதல்ல. இதை நாங்கள் எதிர்க்கிறோம்” என்று அக்கட்சிகள் தெரிவித்துள்ளன.
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, “ இது பொதுமக்களின் கவனத்தை திசை திருப்பும் முயற்சி. இது வெற்றி பெறாது. மக்கள் இதனை ஏற்க மாட்டார்கள்” என்று தெரிவித்துள்ளார்.
ஒரே நேரத்தில் மக்களவை, சட்டமன்றத் தேர்தல்களை நடத்துவது தேசியக் கட்சிகளுக்கே சாதகமானது என்று மாநிலக் கட்சிகள் அஞ்சுவதும், இத்திட்டம் இந்தியாவின் கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிரானது என்றும் எதிர்க்கட்சிகள் கூறுகின்றன.
கவனிப்பாளர்கள் கருத்து
நாடாளுமன்றத்தில் ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ தொடர்பான மசோதா நிறைவேற்றப்பட்டால், அதனைத் தொடர்ந்து இது அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களால் அங்கீகரிக்கப்பட வேண்டும். எல்லா தடைகளையும் கடந்தால் மட்டுமே மத்திய அரசு திட்டமிடுவது போல் இச்சட்டத்தை 2029இல் நடைமுறைப்படுத்த முடியும் என்று அரசியல் கவனிப்பாளர்கள் கருதுகின்றனர்.