புதுடெல்லி: உலக அளவில் அதிக பெட்ரோல் நிலையங்கள் கொண்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா மூன்றாம் இடத்தில் உள்ளது. தற்போது நாடு முழுவதும் உள்ள பெட்ரோல் நிலையங்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தைக் கடந்து விட்டதாக மத்திய எரிசக்தி அமைச்சு தெரிவித்தது.
கடந்த பத்து ஆண்டுகளில் மட்டும் இந்த எண்ணிக்கை இரு மடங்காக அதிகரித்துள்ளது. கடந்த 2015ஆம் ஆண்டு நாட்டில் 50,451 பெட்ரோல் நிலையங்கள் இருந்தன. இவற்றில் 2,967 தனியாருக்கு சொந்தமானவை என்றும், 5.9 விழுக்காடாக இருந்த எண்ணிக்கை, தற்போது 9.33 விழுக்காடாக அதிகரித்துள்ளது என்றும், அந்த அமைச்சு வெளியிட்ட புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
இந்தியாவில் பெட்ரோல், டீசல் சில்லரை முறை விற்பனைக்கு கடந்த 2004ஆம் ஆண்டு அனுமதி வழங்கப்பட்டபோது 27 நிலையங்கள் தொடங்கப்பட்டன. எரிபொருள்களின் விலையை இந்திய அரசின் நிர்வாகமே தீர்மானிக்கிறது. சந்தை விலைக்கு ஏற்ப விலையை நிர்ணயிக்கலாம் என அரசு அனுமதி வழங்கியுள்ள போதிலும் முக்கிய முடிவுகளை இந்திய அரசு கட்டுப்படுத்துகிறது எனலாம்.
இதன் மூலம் உலகின் மூன்றாவது ஆகப் பெரிய பெட்ரோல் கட்டமைப்பைக் கொண்ட நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது.
அமெரிக்காவில் ஏறக்குறைய 1.96 லட்சம் பெட்ரோல் நிலையங்கள் உள்ளன. சீனாவில் 1.15 லட்சம் நிலையங்கள் செயல்படுவதாக 2024 ஆம் ஆண்டு புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
இந்தியாவில் உள்ள பெட்ரோல் நிலையங்களில் 90 விழுக்காடு இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய நிறுவனங்களுக்கு சொந்தமானவை.

